18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய முதல் பெண் சுதந்திர போராட்ட வீரரான ராணி வேலு நாச்சியாரின் பெயரை கடலோரக் காவல்படை கப்பலுக்கு சூட்டுவது குறித்து இந்திய கடலோர காவல்படை (ICG) ஆய்வு செய்யவுள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல ICG இந்திய கடலோர காவல்படை தலைமையகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ரோந்துக் கப்பலுக்கு ராணி வேலு நாச்சியாரின் பெயரை பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது .

கடலோரக் காவல்படை கப்பல்களுக்கு முக்கியப் பெண்களின் பெயரைச் சூட்ட இந்திய கடலோர காவல்படை தீர்மானித்துள்ளதை அடுத்து இந்த பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் போர்க்கப்பலுக்கு வேலு நாச்சியாரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மக்களவையில் சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்த நிலையில் தற்போது இதுகுறித்து பரிசீலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ராணி வேலு நாச்சியார் குறித்த நாட்டிய நாடகத்தை அரங்கேற்றி அவரது புகழுக்கு மகுடம் சேர்த்துவரும் எழுத்தாளரும் இயக்குனருமான ஸ்ரீராம் சர்மா ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “சுதந்திரப் போராட்ட வீரர்களில் ராணி வேலு நாச்சியாருக்கு முக்கிய இடம் இருப்பதை அவர் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது தெரிந்துகொண்டேன்.

சிவகங்கை, காளையார்கோயில், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வேலுநாச்சியாரின் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் இணைக்கப்பட்ட தனது நிலப்பகுதியை 1780ம் ஆண்டில் ஆங்கிலேய படையுடன் போரிட்டு மீட்ட முதல் இந்திய ராணி என்ற தகவல் கிடைத்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கண்ணோட்டத்தில் இது ஒரு சிறுநிகழ்வாக பதிவிடப்பட்ட போதும் இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி விவரிக்கும் போது ஆங்கிலேயர்களுக்கு எதிரான ராணி வேலுநாச்சியாரின் இந்த போர் தேசத்தின் வரலாற்றில் முக்கியமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படையினரால் கொல்லப்பட்ட தனது கணவரின் மரணத்திற்கு பழிவாங்கவும் இழந்த தனது நிலப்பகுதியை மீட்கவும் 8 ஆண்டுகள் காத்திருந்து தனது போர்திறன் மூலம் மீண்டும் ஆட்சி அமைத்த வேலு நாச்சியார் அதன்பின் 16 ஆண்டுகள் ஆட்சி செய்து தனது வீரத்தை நிலைநாட்டினார்.

இவரது வீரத்தை போற்றும் வகையில் கடலோரக் காவல்படையின் கப்பலுக்கு ராணி வேலுநாச்சியார் பெயரைச் சூட்டவேண்டும் என்று 2016 ம் ஆண்டு ஐசிஜி தலைமையகத்திற்கு ஸ்ரீராம் சர்மா கடிதம் எழுதிய நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து அது நினைவாக இருப்பது குறித்து பெருமைகொள்வதாக தெரிவித்துள்ளார்.