சென்னை:
ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது நாங்கள்தான் என்று இந்திய கடலோரக் ஒப்புக் கொண்டுள்ளது.
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்த இந்திய கடலோரக்காவல்படையினர், விசாரித்திருக்கிறார்கள். மீனவர்கள் தங்களுக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்று கூறி பதில் அளித்திருக்கிறார்கள். இந்தி அல்லது ஆங்கிலம் தெரியாதா என்று கூறி கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்தோணி பிச்சை, ஜான்சன் என்கிற 2 ராமேஸ்வரம் மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, மீனவர்களை சுட்ட குண்டு இந்திய கடலோர காவல்படையுடையது அல்ல. என்று தெரிவித்தார்.
தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் நிர்மலா சீதாராமன் கூறியதை ஆமோதித்தார்.
இந்த நிலையில் கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ் தங்கச்சிமடத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர், “ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது கடலோர காவல்படைதான். துப்பாக்கிச் சூடு நடத்திய அபாக்கா கப்பல் சென்னை பிரிவைச் சேர்ந்தது. மீனவர்களால் மீட்கப்பட்ட 0.22 குண்டு கடலோர காவல்படைக்கு சொந்தமானதே.
நடுக்கடலில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. விசைப்படகை மீனவர்கள் நிறுத்தாமல் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்திருக்கலாம்.
இது தொடர்பாக சென்னையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரப்பர் குண்டு என நினைத்து, அவை கடலோர காவல்படைக்குச் சொந்தமானது இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்திருக்கலாம்” என்று ராமாராவ் தெரிவித்தார்.