டெல்லி: குறைந்தபட்சம் 10 ஆண்டுக்கும் ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பியுங்கள் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆதார் வழங்கப்பட்ட தேதியில் இருந்து, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை உங்கள் ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என ஆதார் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்திய குடிமகனின் அடையாள எண்ணாக ஆதார் எண் மாறி உள்ளது. நாட்டின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால், பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருமே ஆதார் வைத்திருக்க வேண்டியது அவசியமாகி உள்ளது. இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் கூட ஆதார் சேவை மையம் தொடங்கிவிட்டது. இருந்தாலும் ஆதாரில் பல்வேறு பாதுகாப்பு வழிகள் மற்றும் விதிமுறைகள் அமல்படுத்தினாலும், சில குற்றச்சாட்டுக்களும் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது, ஆதார் சார்ந்த புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 10 வருடங்களுக்கு ஒருமுறை உங்களுடைய ஆதார் தகவல்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதாா் பதிவு செய்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தவா்கள், அந்த அட்டை பெறுவதற்காக அளித்த அடையாளம் மற்றும் இருப்பிடச் சான்றுகளை சமா்ப்பித்து, விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கடந்த மாதம் வலியுறுத்தியிருந்த நிலையில், ஆதாா் ஒழுங்குமுறை விதிகளில் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் இதுவரை 134 கோடி ஆதாா் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை போ் தங்களது விவரங்களைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. கடந்த ஆண்டில் ஆதாா் தொடா்பாக சுமாா் 16 கோடி புதுப்பிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய, மாநில அரசுகளின் 1,000-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதாா் விவரங்கள் பயன்படுத்தப்படுவதால், தங்களது விவரங்களை மக்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று யுஐடிஏஐ வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, குறைந்தபட்சம் 10 ஆண்டுக்கு ஒருமுறையாவது தங்களது அடையாளச் சான்று, முகவரி உள்ளிட்ட விவரங்களைப் புதுப்பிப்பதை அவசியமாக்கி ஆதாா் ஒழுங்குமுறை விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையில், ‘ஆதாா் பதிவு செய்த நாளில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது தங்களது அடையாள, முகவரிச் சான்று உள்ளிட்ட விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மத்திய அடையாளங்கள் தரவு கட்டமைப்பில் (சிஐடிஆா்) ஆதாா் தகவல்களின் நீடித்த துல்லியத்தன்மையை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள முடியும். ஆதாா் (பதிவு மற்றும் புதுப்பிப்பு) ஒழுங்குமுறை விதிகளில் இதற்குரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாா் அட்டை வைத்திருப்பவா்கள், அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை இணையவழியில் புதுப்பிப்பதற்கான வசதியை யுஐடிஏஐ ஏற்படுத்தியுள்ளது. வலைதளப் பக்கம் மற்றும் செயலி மூலம் இணையவழியில் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். ஆதாா் பதிவு மையங்களுக்கு நேரடியாகச் சென்றும் விவரங்களைப் புதுப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளச் சான்றில் உங்களுடைய பெயர் மற்றும் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும். வழக்கமாக அடையாள சான்றாக நீங்கள் பயன்படுத்தும் பாஸ்போர்ட், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை நீங்கள் சமர்ப்பித்து உங்களுடைய ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.
நீங்கள் ஆவணங்களை புதுப்பிப்பதற்காகவே UIDAI இல் ஒரு சிறப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. உங்களுடைய Myaadhaar போர்ட்டல் அல்லது Myaadhaar என்ற செயலியில் updatedocument என்ற அம்சத்தை பயன்படுத்தி நீங்கள் ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். உங்களுக்கு ஆன்லைனில் ஆவணங்களை எப்படி புதுப்பிக்க வேண்டும் என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை என்றால், நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆவணங்களின் நகலை வழங்கி, ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.
நீங்கள் உங்களுடைய முகவரியையும் சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டலில் அப்டேட் செய்து கொள்ளலாம். இதில் நீங்கள் உங்களுடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் உங்களின் வசிப்பிடம் இதை மட்டும் புதுப்பிக்கலாம். உங்களுடைய ரேகை, ஐரிஸ், மற்றும் புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பதற்கு நீங்கள் ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.