ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணியில், இன்னும் ஆறாவது பந்தவீச்சாளருக்கான பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளதை நாம் அறிவோம்.
இந்நிலையில், முதல் ஒருநாள் தொடரை இழந்ததை அடிப்படையாகக் கொண்டு, இந்தியப் பந்துவீச்சு பலவீனமானது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
ஆனால், இத்தொடர்களில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். ஒருநாள் தொடரைப் பொறுத்தவரை, முதல் இருபோட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முறையே 374 & 389 ரன்களைக் குவித்தது. பின்னால், அந்தப் பெரிய இலக்குகளை சேஸிங் செய்த இந்திய அணி, முறையே 308 & 338 ரன்களை எடுத்து தோற்றது.
இரண்டு போட்டிகளிலும், எப்படியோ 300 ரன்களை இந்திய அணியால் தாண்ட முடிந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும், ஆஸ்திரேலியா நிர்ணயித்த இலக்கு 330 ரன்களுக்குள் என்றிருந்தால், இந்திய அணி வென்றிருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
இப்போது மூன்றாவது ஒருநாள் போட்டியை எடுத்துக்கொண்டால், அதில் இந்திய அணி எடுத்த ரன்கள் வெறும் 302 ரன்கள் மட்டுமே. ஆனால், பின்னர் சேஸிங் செய்த ஆஸ்திரேலிய அணியால், அந்தக் குறைந்த ரன்களைக்கூட எடுக்க முடியவில்லை. அந்த அணியை 289 ரன்களுக்குள் இந்தியாவின் 5 பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். ஆனால், முந்தைய 2 போட்டிகளில், இந்திய பேட்ஸ்மென்களை, 300 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவின் 6 பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
மேலும், இந்திய அணி, தான் தோற்ற முதல் 2 போட்டிகளில், தனது 10 விக்கெட்டுகளையும் முழுமையாக இழக்கவில்லை. ஆனால், தான் தோற்ற கடைசிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.
மேலும், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில், கேப்டன் விராத் கோலி பவுலிங் யூனிட்டை திறமையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பதையும் மறந்துவிட முடியாது.
இப்போது டி-20 போட்டிக்கு வருவோம். இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, மைதானத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. எனவே, முதலில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் 6 பந்துவீச்சாளர்களை எதிர்த்து 161 ரன்களை எடுத்தது.
டி-20 போட்டியில், 161 ரன்கள் பெரிய இலக்கில்லை என்ற நிலையில், சேஸிங் செய்த ஆஸ்திரேலியாவால், இந்தியாவின் 5 பந்துவீச்சாளர்களை எதிர்த்து 150 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது. இந்தியாவைப் போன்று ஆஸ்திரேலியாவும் 7 விக்கெட்டுகளை இழந்தது.
இதில், கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடுகையில், இந்திய பீல்டிங் மோசமாக உள்ளது. பல கேட்ச்சுகள் தவறவிடப்படுகின்றன. இவற்றையும் மீறியே, இந்தியாவின் 5 பந்துவீச்சாளர்கள் சாதிக்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அந்தவகையில் பார்க்கையில், இந்திய பேட்டிங்குடன் ஒப்பிடுகையில், இந்தியப் பந்துவீச்சு துறையும் சமபலமாகவே உள்ளதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டியுள்ளது!