அகமதாபாத்
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் சர்வதேச நிதி சேவை மைய ஆணையத்தின்(ஐ எஃப் எஸ் சி ஏ) அடிக்கல் நாட்டு விழா நட்ந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார். அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார்.
மோடி தனது உரையில்,
“உலக அளவில் கடந்த 2008-ம் ஆண்டு உலக அளவில் மிகப்பெரும் தேக்க நிலை உருவானது. இந்தியாவின் பொருளாதார சூழலும் அப்போது எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் பாதிப்புக்குள்ளானது. அந்நேரத்தில் குஜராத் மாநிலம் நிதித்துறையில் மிக முக்கியமான முடிவை மேற்கொண்டது. அந்த நேரத்தில் உருவான சிந்தனையின் வெளிப்பாடு இன்று வளர்ச்சியடைந்து ஐஎப்எஸ்சிஏ இங்கு உருவாகும் நிலை எட்டப்பட் டுள்ளது.
தற்போதைய 21 ம் நூற்றாண்டில் நிதி மற்றும் தொழில்நுட்பம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தொழில்நுட்பம் என்று எடுத்துக் கொண்டால் அது அறிவியலும், கணினி மென்பொருளும் ஒன்றிணைந்ததாகும் . இந்தியாவுக்கு இதில் மிகுந்த அனுபவம் உள்ளது. சர்வதேச அளவில் மின்னிலக்க பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதம் அளவுக்கு உள்ளது.
இதுவரை சர்வதேச நிதி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் திகழ்ந்தன. அந்தவரிசையில் தற்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்தியா மிகப் பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது. நம்நாடு மிக அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நாடாகவும் திகழ்கிறது.”
எனத் தெரிவித்துள்ளார்.