கட்டாக்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரைக் கைப்பற்றி கோப்பையை வென்றது.

வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த இலக்க‍ை, 48.4 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து எட்டியது இந்தியா. இந்திய பேட்ஸ்மேன்கள் 3 பேர் அரைசதம் அடித்தனர். ஆல்ரவுன்டர் ஜடேஜா பக்கபலமாக இருந்து, இறுதியில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

ரோகித் 63 ரன்களிலும், ராகுல் 77 ரன்களிலும் அவுட்டான பிறகு, நடுக்கள வீரர்களான ஷ்ரேயாஸ், ரிஷப் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்திய அணிக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டது. அப்போதுதான் ஆட்டத்தைக் கையில் எடுத்தனர் கேப்டன் கோலியும், ஆல் ரவுண்டர் ஜடேஜாவும்.

இருவரும் பிரமாதமான இன்னிங்ஸை ஆடினர். ஆனால், எப்படியும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராத் கோலி, 85 ரன்களில் விக்கெட் இழந்தார். ஆனாலும், ஜடேஜாவுடன் 8வது விக்கெட்டாக களமிறங்கிய ஷர்துல் தாகூர் அசத்தினார்.

அவர், யாரும் எதிர்பாராத வகையில் 6 பந்துகளில், 1 சிகஸ் மற்றும் 2 பவுண்டரிகளை அடித்து நொறுக்கி, 17 ரன்களைக் குவித்து வெற்றிக்கு மிக முக்கிய காரணமாய் இருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் இடம்பெற்ற ஜடேஜா மற்றும் தாகூர் இணைந்து இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். 31 பந்துகளில் 39 ரன்களை அடித்த ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களில் கீமோ பால் மிரட்டினார். இவர் மொத்தம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதில் கோலியின் விக்கெட்டும் அடக்கம்.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது ஒருநாள் தொடர் வெற்றிப் பயணத்தை (மொத்தம்10 தொடர்கள்) இந்தியா தடையின்றி தொடர்கிறது.