டில்லி
வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா பரவலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சுமார் 1.5 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது 3.02 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது உலக அளவில் 6 தடுப்பூசிகளுக்கு நான்கு நாடுகள் ஒப்புதல் அளித்து சென்ற வாரம் வரை சுமார் 16 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது சிறிது சிறிதாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் இந்திய அரசு கடும் முனைப்புக் காட்டி வருகிறது. நேற்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களிடம், “வரும் ஜனவரி மாதம் எப்போது வேண்டுமானாலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்க உள்ளது. மக்களின் பாதுகாப்பு மற்றும் மருந்தின் வீரியம் ஆகியவை முக்கியமான அம்சமாக அரசு கருதுகிறது.
அதன்படி பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் அரசு தடுப்பூசிகளைத் தேர்வு செய்ய உள்ளது. இதில் நாங்கள் ஒரு போதும் சமரசம் செய்ய விரும்பவில்லை. தற்போது மருந்து நிறுவனங்கள் அவசர அனுமதிக்கு அனுப்பி உள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் தேசிய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளது.