டெல்லி: இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது தெரிய வந்துள்ள நிலையில், இந்தியாவில் அவசர கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இன்று உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி கலந்துகொள்ளும் அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து நாட்டில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது  கொரோனா வைரஸ் தொற்று சற்றே குறைந்து வரும் நிலையில், புதிய கொரோனா வைரஸ் பரவல்,  உலக நாடுகளை பீதிக்குள்ளாகி உள்ளது.  இதன் காரணமாக, இங்கிலாந்து அரசு, அங்கு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்துவிட்டதுன், பொதுமக்கள் மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், இங்கிலாந்தில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து விவாதிப்பதற்காக இன்று ஒரு அவசர கூட்டத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்த கூட்டத்தில்,  இந்திய சுகாதார சேவைகள் டைரக்டர் ஜெனரல், சுகாதார அமைச்சகத்தின் கூட்டு கண்காணிப்புக் குழு மற்றும், உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி டாக்டர் ரோடெரிக்கோ எச் ஓப்ரின் கலந்துகொண்டுள்ளார். இன்று காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் தற்போதுதான், பொதுமக்கள்  இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும் சூழலில், மீண்டும் புதிய கொரோனா வைரஸ் குறித்த அறிவிப்பு மக்களை மேலும் பீதிக்குள்ளாக்கி வருகிறது.