ஜெனிவா

குழந்தைத் தொழிலாளர் முறை இந்தியாவில் அடியோடு ஒழிக்கப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஜெனிவாவில் நடந்த கருத்தரங்கில் உறுதி அளித்துள்ளார்.

ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர் மையம் குழந்தை தொழிலாளர் நலம் மற்றும் அவர்களின் கல்வி பற்றி ஒரு கருத்தரங்கு நடத்தியது.

அதில் இந்தியா சார்பாக அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கலந்துக் கொண்டார்.

கருத்தரங்கில் அவர் பேசுகையில் கூறியதாவது :

”இந்த நிகழ்வில் கலந்துக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் முறையை அடியோடு விரைவில் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

தொழிலாளர்களின் குறைந்த பட்ச வயது வரம்பு, மற்றும் அனைவருக்கும் கட்டாயக் கல்வி ஆகிய இரு விதிகளையும் முழுமையாக இந்தியா ஏற்றுக் கொள்கிறது.

ஏற்கனவே 2016ஆம் வருடம் இந்தியா ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.

அதன்படி, 14 வயதுக்கு குறைவாக உள்ளவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது

14 முதல் 18 வயதுக்குள் இருப்போருக்கு மிகவும் பாதுகாப்பான சுற்றுச்சூழலில் உள்ள பணிகளில் மட்டுமே அமர்த்தப் படவேண்டும்.”

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி இதனை வெகுவாக பாராட்டியுள்ளார்.

சத்யார்த்தி, அரசு தனது திட்டங்கள் மற்றும் அதன் முடிவுகளை சர்வதேச தொழிலாளர் மையத்துக்கு அறிவிக்க வேண்டியுள்ளதால், விரைவில் குழந்தைத் தொழிலாளர் முறையை அடியோடு ஒழிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தான் நம்புவதாக குறிப்பிட்டார்.