இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ள ஒருநாள் சர்வதேச போட்டியின் தேதியில் மாற்றம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.

இதில் முக்கிய போட்டியாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 15 ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான மறுநிமிடம் முதல் இந்தியா முழுக்க இருந்து ரசிகர்கள் குஜராத்துக்கு படையெடுக்க திட்டமிட்டுள்ளதுடன் அக்டோபர் 15 ம் தேதி போட்டியைக் காண வசதியாக விமான டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளனர்.

இதனால் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் அகமதாபாத் தன்னை சுற்றியுள்ள ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு தங்குவதற்கு இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிசிசிஐ கூட்டம் இன்று நடைபெற உள்ளதாகவும் அதில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியை முன்கூட்டியே அக்டோபர் 14 ம் தேதியே நடத்த விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து இந்த போட்டியைக் காண ஏற்கனவே பல ஆயிரக்கணக்கில் செலவு செய்த கிரிக்கெட் ரசிகர்கள் இந்த திடீர் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் சமூக வலைத்தளத்தில் பொங்கி வருகின்றனர்.