சிட்னி: பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர், சிட்னியில் நாளை(நவம்பர் 27) துவங்குகிறது.
கடந்த மார்ச் மாதம், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், கொரோனா அச்சம் காரணமாக, இந்தியாவில் ரத்தான நிலையில், கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து, ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி.
இந்திய அணியில், முக்கிய பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா இடம்பெறாத நிலையில், ஷிகர் தவானுடன் களமிறங்குவது யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
அந்த விஷயத்தில், கேஎல் ராகுலா? அல்லது மயங்க் அகர்வாலா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எந்த இடத்தில் களமிறக்கிவிட்டாலும் கவலையில்லை என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒருவேளை ராகுல் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தால், மயங்க் அகர்வாலுக்கு அணியில் இடம் கிடைப்பதே கடினமாகிவிடும். ஏனெனில், ஹர்திக் பாண்ட்யா அணியில் இடம்பெற்றால், அகர்வாலின் இடம் கேள்விக்குறியாகிவிடும்.
அதேசமயம், ஹர்திக் பாண்ட்யாவால் பந்துவீச முடியாத பட்சத்தில், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என இந்திய அணி முடிவுசெய்தால், பாண்ட்யாவுக்கு இடம் கிடைப்பதே சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது. எப்படியோ, நாளை டாஸ் போடப்படும் வரை எதுவும் உறுதியில்லை என்ன்று கூறப்படுகிறது.