துபாய்: ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்க்லே.
ஐசிசி தலைவராக பதவி வகித்து வந்த இந்தியாவின் சஷாங்க் மனோகரின் பதவிகாலம், கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த நிலையில், கொரோனா காரணமாக, தலைவர் பதவிக்கான தேர்தல் சிறிதுகாலம் தள்ளிப்போனது.
இந்நிலையில், தேர்தல் பணிகள் துவங்கின. பிசிசிஐ சேர்மன் கங்குலி, தலைவர் பதவிக்கான கோதாவில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேரடிப் போட்டியில் இருந்தவர்கள் நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே மற்றும் சிங்கப்பூரின் கவாஜா ஆகியோர் மட்டுமே.
மொத்தம் 16 ஓட்டுகளில், 15 வாக்குகள் பெறுபவர்கள் மட்டுமே தலைவர் ஆக முடியும் என்ற நிலையில், கிரேக் பார்க்லேவுக்கு 11 வாக்குகள் கிடைத்த நிலையில், அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சிங்கப்பூரின் கவாஜா 5 வாக்குகளேப் பெற்றார்.
“தான் ஐசிசி தலைவராக தேர்வுசெய்யப்பட்டதில் மகிழ்ச்சி. எனக்கு ஆதரவளித்த இயக்குநர்களுக்கு நன்றி. 104 உறுப்பினர்களின் சார்பாக இருந்து, கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்” என்றார் பார்க்லே.