ஐநாவில் பாலஸ்தீன அமைப்பை சேர்க்கும் வாக்கெடுப்பு: இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா

Must read

ஐ.நா.சபை:

ஐ.நா. நடத்திய வாக்கெடுப்பில் முதல்முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.


லெபனானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷாகீத் என்ற பாலஸ்தீன அரசு சாரா அமைப்பை ஐநாவில் சேர்ப்பதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஷாகீத் அமைப்பை உறுப்பினராக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்த வாக்கெடுப்பை ஐநா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் இஸ்ரேல் முன்னெடுத்தது.

இதில் புதிய திருப்பமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

கடந்த 6-ம் தேதி ஐநாவின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

இந்த விசயம் வெளியே தெரியாமல் இருந்தது. இஸ்ரேல் துணை தூதர் மயா கடோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த பிறகுதான் ஆதரவாக வாக்களித்த விசயம் தெரியவந்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நிலவும் பிரச்சினைகளில் இந்தியா இதுவரை நடுநிலைமை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்தபோது, அந்நாட்டை எதிர்த்து மற்ற நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்து வந்தது.

தற்போது நடந்த வாக்கெடுப்பில் மொத்தம் 28 வாக்குகள் பதிவாயின. 15 வாக்குகள் ஆதரவாக பதிவாயின. 5 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த முக்கிய நாடுகளில் பிரேஸில், கனடா, கொலம்பியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, அயர்லாந்து, ஜப்பான், கொரியா, உக்ரைன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.

வாக்கெடுப்புக்கான முன்வடிவை அறிமுகப்படுத்தி ஐ.நா. சபைக்கான இஸ்ரேலின் நிரந்த உறுப்பினர் டேனி டேனன் கூறும்போது, அரசு சாரா நிறுவனத்தை ஐநாவில் சேர்ப்பதற்கு அவற்றின் செயல்பாடு குறித்த முழு ஆதாரங்கள் அளிக்கப்பட வேண்டும்.

ஆனால் ஷாகீத் அளித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. வலுவான ஆதாரங்களை ஷாகீத் அளித்தால், அதை இஸ்ரேல் எதிர்க்கப் போவதில்லை.

லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகளின் உரிமைகளை காக்க பாலஸ்தீனிய அரசு சாரா அமைப்பான ஷாகீத் இருந்ததாக கூறுவது தவறு.

இந்த அமைப்பு இஸ்ரேலுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்தது தெரியவந்துள்ளது. இஸ்ரேல் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் இந்த அமைப்பை கடந்த மார்ச்சில் தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தனர் என்றார்.

 

More articles

Latest article