டில்லி

ங்க தேசத்துக்கு அதிக அளவில் கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா உறுதி அளித்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் வங்க தேச தூதரகத்தின் பங்களிப்புடன் பங்க பந்து ஊடக மையம் திறக்கப்பட்டுள்ளது.  வங்க தேச தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஹசன் மகமூது இந்த விழாவில் கலந்துக் கொண்டார்.  இந்த விழா நிறைவுக்குப் பிறகு அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அமைச்சர், “இந்தியா மற்றும் வங்கதேச உறவு புதிய உயரத்தை எட்டி உள்ளது. நாங்கள் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுடன் உறுதியான உறவில் உள்ளோம். இங்கு வங்க தேசத்தின் தந்தையான முஜிபுர் ரஹ்மான் நினைவாக பங்க பந்து ஊடக மையம் திறக்கப்பட்டு உள்ளது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

கொரோனாவை இந்தியா சிறப்பாகக் கையாண்டு வந்துள்ளது. இங்குள்ள நிலைமை சீரடைந்ததும் கூடுதல் தடுப்பூசிகளை  வங்க தேசத்துக்கு அனுப்புவதாக இந்தியா உறுதியளித்து உள்ளதும் இருநாடுகளின் நட்புறவைக் காட்டுகிறது.

வங்க தேசத்துக்கு முன்பு சீரம் நிறுவனம் மாதந் தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வந்த நிலையில் பிப்ரவரியில் 20 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே அனுப்பப்பட்டன.

பிறகு இங்கு இரண்டாவது அலை உச்சம் பெற்ற பின் இதுவரை தடுப்பூசிகள் அனுப்பப்படவில்லை.  இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் வந்ததும் கூடுதல் தடுப்பூசிகளை அனுப்புவதாகப் பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார்”” எனத் தெரிவித்துள்ளார்.