இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் விரைவில் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே ஜப்பானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளும் முதல் நாடு இந்தியா ஆகும்.

ind_jap

கடந்த ஆண்டு டிசம்பரில் ஜப்பான் பிரதமர் ஷின்ப்ஸா அபே இந்தியா வந்தபோது இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனாலும் சில சட்ட சிக்கல்களால் ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 11,12 தேதிகளில் மேற்கொள்ளவிருக்கும் ஜப்பான் பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட அணுகுண்டுகளால் சின்னாபின்னமான ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் இன்னும் அணு ஆயுதப் போரின் விளைவான வடுக்களை சுமந்து நிற்கும் ஜப்பான் அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் கையழுத்திடாத நாடாகிய இந்தியாவுடன் அணுஆயுத ஒப்பந்த செய்துகொள்ள ஒரு காலத்தில் தயங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே அணு அயுதம் தொடர்பான விஷயங்களில் இந்தியா காட்டிவரும் பொறுப்பும், நேர்மையுமே இந்தியாவுடன் ஜப்பான் இப்போது இந்த உடன்படிக்கையை செய்துகொள்ள முன்வந்திருப்பதற்கு காரணம் என தெரிகிறது.
வடகொரியா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் போல இந்தியா அணு ஆயுத விஷயத்தில் எப்போதும் நடந்துகொள்வதில்லை. அணு ஆயுத விஷயத்தில் இந்தியா மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்கிறது என டோக்கியோ பவுண்டேஷனைச் சேர்ந்த ஆய்வாளர் சடோரு நகாவோ கூறியுள்ளார். மேலும் இந்தியா அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத போதிலும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, தென்கொரியா, மங்கோலியா, கஜகஸ்தான், அர்ஜண்டினா மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் ஏற்கனவே இந்தியாவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
அணு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னும் ஒருவேளை இந்தியா அணு ஆயுத பரிசோதனை நடத்தினால் இரு தரப்பு ஒத்துழைப்பு நிறுத்திக் கொள்ளப்படும் என்று இருநாடுகளும் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. தென்சீன கடற்பகுதியில் சீனா ஒருபக்கம் ஆதிக்கம் செலுத்திவரும் வேளையில் இந்த ஒப்பந்தம் இந்தியா-ஜப்பான் இரு நாடுகளுக்கும் நலம் பயக்கும் என்று இருநாடுகளும் கருதுவது குறிப்பிடத்தக்கது.