வாஷிங்டன்
உலக வங்கி ஆய்வின்படி உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 7 ஆம் இடத்துக்குச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி ஒரு கணக்கெடுப்பை எடுத்துள்ளது. இதில் உலகில் உள்ள அனைத்து பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளின் கடந்த மூன்றாண்டு வளர்ச்சி கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கணக்கெடுப்பில் 2016, 17 மற்றும் 18 ஆம் ஆண்டு வளர்ச்சி கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இந்த ஆய்வு முடிவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2016ஆம் வருடம் 18.77 லட்சம் கோடி டாலராகவும், 17 ஆம் வருடம் 19.48 லட்சம் கோடி டாலராகவும் 18 ஆம் வருடம் 20.49 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. இரண்டாம் இடத்தில் சீனா, மற்றும் மூன்றாம் இடத்தில் ஜப்பான் நாடுகள் உள்ளன.
இந்த பட்டியலில் இந்தியா 7 ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு முன் உள்ள இரு நாடுகளாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் உள்ளன. இந்த மூன்று நாடுகளின் பொருளாதார வளர்சி 3 லட்சம் கோடி டாலருக்குக் குறைவாக உள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகமாக இருந்த போதிலும் இந்த வளர்ச்சி குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை வரும் 2025க்குள் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.