இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய உதவியை வழங்குவது குறித்து இந்திய அரசு பரிசீலிக்கலாம் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கை, இப்போதுள்ள சூழலில் நெருக்கடியில் இருந்து மீள வெளியேற நீண்ட காலம் ஆகலாம் என்று கூறினார். “மத்திய அரசு தலையிட்டு, அவர்களுக்கு எப்படி உதவுவது என்பது குறித்து ஆய்வு செய்யலாம். நிலைமையை ஆய்வு செய்து நிபுணர்கள் அளிக்கும் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கலாம்” என்று செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கச்சத்தீவை மீட்பதற்கான கோரிக்கை குறித்த கேள்விக்கு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இந்த பிரச்சனை ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டது என்று கூறினார்.

இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல் இல்லாமல் பாக் ஜலசந்தியில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற யோசனை தற்போது இலங்கை சந்தித்து வரும் நெருக்கடி நிலையில் அது நீண்ட காலம் எடுக்கும்.

அரசு நிர்வாகம் சீர்குலைந்ததற்கு அ.தி.மு.க.வை குற்றம் சாட்டிய கார்த்தி சிதம்பரம், தமிழ் நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தி.மு.க. அரசு சமர்ப்பித்துள்ளதை அடுத்து மாநில நிதிநிலையை மேம்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

கடந்த ஏழு ஆண்டு பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. மற்றும் கோவிட் -19 தொற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கொந்தளிப்பான சூழலை இந்திய மக்கள் சந்திக்க நேரிட்டதாகக் கூறினார்.

இசைஞானி இளையராஜாவுக்கு மக்கள் மத்தியில் அதிக மதிப்பும் மரியாதையும் உண்டு என்றார். அவர் தனது கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டது துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார்.

மேலும், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேரப்போவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், “அவர் ஒரு புகழ்பெற்ற தரவு விஞ்ஞானி அவரது யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் காங்கிரசுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.