லடாக்: இந்திய-சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில், சீனா ராணுவம் திடீரென 2 டஜன் போர் விமானங்களை குவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவும், 50 ஆயிரம் ராணுவ வீரர்கைளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இச்சம்பவத்தையடுத்து பதற்றம் நிலவியதால் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் உயரிய அந்தஸ்திலுள்ள அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் ஓரளவு உடன்பாடு எட்டப்பட்டதால் இரு தரப்பும் சர்ச்சைக்குரிய கிழக்கு லடாக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக படைகளைப் பின்வாங்கின.
ஆனால், சீனா கூறியபடி, முழுமையாக தனது படைகளை பின்வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாகவே லடாக்கில், சீனா மீண்டும் தனது படைவீரர்களை நிறுத்தி வருகிறது. திபெத்திலிருந்து ஜிங்ஜியாங் ராணுவ தளத்துக்கு சீனா ஏராளமான படை வீரர்களை அனுப்பியிருக்கிறது. மேலும் 24 பேர் விமானங்கள் மற்றும் நவீன ஆயுதங்களை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கூடுதலாக படைகளை குவித்துள்ளது.இந்திய ராணுவமும் 50 ஆயிரம் வீரர்களை நிலை நிறுத்தியிருக்கிறது. இதனால் லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.