டெல்லி: மத்தியஅரசு பல மாநிலங்களில் அமல்படுத்தி உள்ள ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, இதுவரை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.2013ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்  ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு  திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க முடியும். நீங்களும் எந்த மாநிலத்திலும் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கலாம். அதேபோல பிற மாநிலத்தவர்களும் உங்கள் பகுதீ ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கலாம்.இந்த திட்டம் தான் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்று அழைக்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் கடந்த ஆக்டோபர் முதல் அமலில் உள்ளது. ஆனால், வேறு சில மாநிலங்களில் அமல்படுத்தப்படாமல் உள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகள், துயரம் தொடர்பாக சூமோட்டோ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் உச்சநீதிமன்றம், இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் அமர்வில் விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையைத்தொடர்ந்து, கொரோனா பெருந்தொற்று முடியும் வரை சமூக உணவுக்கூடம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும், புலம்பெயர் தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்ய உரிய திட்டத்தை ஜூலை 31க்குள் அமல்படுத்த வேண்டும்.

மத்திய அரசு மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப, அவர்கள் கோரும் அளவு தேவையான அனைத்து உணவு தானிய வகைகளை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன்,  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தொடர்பாக மாநில அரசுகள் திட்டம் வகுக்க வேண்டும்,  ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை 31க்குள் அமல்படுத்த வேண்டும் என்றும்  உத்தரவிட்டனர்.