டெல்லி: இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்துக்கு இந்தியா சார்பில்  உயர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. எகிப்து வழியாக   200 டிரக்குகளில் 3,000 டன் உதவி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

 இஸ்ரேல்மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த   பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் அமைப்பினர்  திடீரென தொடுத்த பெரும்  தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. கடந்த 7ஆம் தேதி முதல்  இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது.  இந்த தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தை முழுவதுமாக அழித்து விடும் முயற்சியில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பாலஸ்தீனத்தை சித்து வரும் இஸ்ரேல், காசா பகுதியில்  உள்ள மருத்துவமனை உள்பட பல இடங்களையும் குண்டு வீசி தாக்கி வருகிறது. இதனால், அப்பாவி மக்கள் குழந்தைகள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இது  பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பாலஸ்தீனிய பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 4,300 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போரில் இதுவரை 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும், 4,137 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீது தீவிர வான்வழித் தாக்குதல் மேற்கொண்டு வரும் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலுக்கும் ஆயத்தமாகி வருகிறது

இதனால், பல நாடுகள்  போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால்,  இஸ்ரேல் அதை மறுத்து, காசாவை வேட்டையாடி வருகிறது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்க பல நாடுகள் வலியுறுத்திய நிலையில், அதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கி உள்ளது. இதனால்,  காசாவில் உள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்து பொருள்கள், தண்ணீர், உணவு ஆகியவற்றை உலக நாடுகள் வழங்கி வருகின்றன. அதன்படி இந்தியாவும் தனது பங்குக்கு மருந்து பொருட்களை அனுப்பி உள்ளது.

இதற்காக, (போர் தொடங்கிய 15 -ஆவது நாளில்)  காஸா- எகிப்து இடையே உள்ள ஒரே எல்லையான ரஃபா எல்லை சனிக்கிழமை (அக்-21ந்தேதி) திறக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து உணவு, மருந்து பொருள்களுடன் லாரிகள் காஸாவுக்கு சென்றதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், பாலஸ்தீன மக்களுக்கான சுமார் 6.5 டன் மருத்துவ உதவிகள் மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு ஐஏஎப் சி-17 விமானம் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இதில், அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருள்கள், கூடாரங்கள், தூங்கும் பைகள், தார்ப்பாய்கள், சுகாதாரப் பொருள்கள், தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் போன்ற பிற தேவையான பொருள்கள் அடங்கும் என  தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் நிவாரணம் மற்றும் பணிகளுக்கான நிறுவனத்திற்கு (UNRWA) பங்களிப்புகள் மூலம், கடந்த இருபது ஆண்டுகளில் $35 மில்லியனுக்கும் மேலாக வழங்கியுள்ளது.