பெங்களூரு:

இந்தியாவில் தொழில் தொடங்க இந்திய தொழில் அதிபர்களையும், வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கென பிரத்யே பிரதிநிதிகள் அடங்கிய சந்திப்புகள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த செயல்பாட்டுக்கு உழைக்கும் வர்கத்தினர் வேறு விதமான வகையில் தகவல்களை அளித்து வருகின்றனர்.

ஆம், கடந்த ஆண்டு மட்டும் வேலை நிறுத்தம் காரணமாக 11.73 லட்சம் மனித நாட்கள் நம் நாட்டில் வீணடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.550 கோடியாகும். 2016ம் ஆண்டை விட 44 சதவீத மனித நாட்கள் அதிகரித்துள்ளது. இதனால் 57 சதவீத உற்பத்தி பாதித்துள்ளது.

2016ம் ஆண்டில் மனேசரில் உள்ள மாருதி சுசூகி நிறுவனம், குஜராத் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை, தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர்கள், கேரளாவில் பலதரப்பட்ட தொழிலாளர்கள் அதிகளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2017ம் ஆண்டு கர்நாடகாவில் ஐடி ஊழியர்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

மத்திய, மாநில அரசுகள் முதலீடுகள் ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இத்தகைய போராட்டங்களால் புதிய தொழில்நிறுவனங்கள் தொழில் தொடங்க தயக்கம் காட்டும் நிலை உருவாகிறது. இதனால் எதிர்கால இளைய சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 2017ம் ஆண்டில் வேலைநிறுத்தம் காரணமாக 5.74 லட்சம் மனித நாட்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 1.37 லட்சம் மனித நாட்களும், குஜராத்தில் 99 ஆயிரத்து 883 நாட்களும் இழப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் அதிகபட்சமாக ரூ.286 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதித்துள்ளது. மேற்கு வங்கம் 4 ஆயிரத்து 683 நாட்களை இழந்து ரூ. 181 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.

எனினும் பல துறைகளில் இழப்பு ஏற்பட்டிருப்பதால் உற்பத்தி பாதிப்பை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. மனித நாட்கள் கணக்கிடப்பவது இப்படித்தான்…

‘‘ஒருவர் நாள் ஒன்றுக்கு 9 மணி நேரம் பணிபுரிகிறார். அப்போது ஒரு நபர் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் இது ஒரு மனித நாளாக கணக்கிடப்படுகிறது. ஒரு தொழிற்சாலையில் 100 ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் 300 நாட்கள் இழப்பை ஏற்படுத்துகிறது’’ என்று தொழிலாளர் துறை ஆணையர் ஒருவர் விளக்கம் அளித்தார்.

2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டில் 73.42 லட்சம் மனித நாட்கள் பாதித்துள்ளது. இதன் மூலம் ஆயிரத்து 435 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2014 முதல் 2016ம் ஆண்டு வரை இழப்பு இறங்கு முகமாக இருந்தது. ஆனால், 2017ம் ஆண்டில் இது அதிகரித்துவிட்டது. ஆனால், உற்பத்தி பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.