டில்லி

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வர்த்தக ரீதியாக வழங்கப்பட்டுள்ள சலுகைகளை ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை சிஆர்பிஎஃப் வீரர்கள் 78 வாகனங்களில் சென்றபோது புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை தீவர்வாதி ஆதில் 350 கிலோ வெடி மருந்து உள்ள வாகனத்தில் வந்து மோதி உள்ளான்.   இதனால் 44 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ள்னர்.

இன்று இது குறித்து முடிவுகள் எடுக்க அமைச்சரவையின் அவசரக் கூட்டம் ஒன்று பிரதமர் மோடியில் தலைமையில் இன்று காலை நடந்தது.   கூட்டம் முடிந்த பிறகு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, “இனி பாகிஸ்தானுக்கு வர்த்தக ரீதியாக எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது.

அந்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள ‘வர்த்தகத்துக்கு உகந்த நாடு’ என்னும் அந்தஸ்தையும்  ரத்து செய்துள்ளோம்.   இந்த தாக்குதலில் நேரடி தொடர்பில் உள்ள பாகிஸ்தானால் அதை மறுக்க முடியாது.    இனி சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப் படுத்தும் நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத் துறை தொடங்க உள்ளது.

இந்த தாக்குதலை நடத்தியவர்களும் இதற்கு  பின்னணியில் உள்ளவர்களும் தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் அதற்கான விலையை விரைவில் அளிக்க வேண்டி வரும்.    இந்த தாக்குதலில் மரணம் அடைந்தோர் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.