டில்லி
தற்போது மாலத்திவில் நிகழும் சூழலை இந்தியா கவனத்துடன் கண்காணித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தற்போது மாலத்தீவில் கடும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என பல நாடுகளும் கூறி வருகின்றன. ஆனால் மாலத்தீவு அரசு இது உள்நாட்டு விவகாரம் எனவும் இதில் இந்தியா உட்பட எந்த நாட்டின் தலையீடும் தேவை இல்லை என மறுத்துள்ளது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் “மாலத்தீவில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்க இந்தியா என்ன திட்டம் வைத்துள்ளது. கடற்படி மூலம் தாக்குதல் நடத்த இந்தியாவிடம் திட்டமி உள்ளதா?” என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் தனது பதில், ”இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நெருக்கடி நிலை அமுல்படுத்தப் பட்டது. இதைஒட்டி மாலத்தீவுடனான உறவில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனா மாலத்தீவு அதிபருக்கு ஆதரவு தெரிவிக்கிறது. இதன் மூலம் தனது ஆதிக்கத்தை அந்நாட்டில் அமைக்க முனைந்து வருகிறது.
இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சம் ஏற்படலாம் என பல நாடுகள் கருத்து தெரிவிக்கின்றன. அத்துடன் இந்தியா பரிசாக அனுப்பிய ஹெலிகாப்டரை திரும்ப அனுப்பிய மாலத்தீவு பாகிஸ்தானுடனான உறவை வளர்க்க ஆர்வம் காட்டுகிறது. இந்த சூழ்நிலைகளை இந்தியா கவனத்துடன் கண்காணித்து வருகிறது. தேவையான நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.