பெங்களூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என வலியுறுத்தி வரும் 12ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகாவில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி பந்த் நடத்த கன்னட அமைப்புகள் வலியுறுத்தி உள்ளது.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.  நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு முடக்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக எதிர்ப்புக்கு  பதிலடியாக வரும் 12ம் தேதி கர்நாடகாவில் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.

வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பின் கூட்டமைப்பு இந்த பந்த்துக்கு அழைப்புவிடுத்துள்ளது.

மேலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஜினி, கமலின் திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம்; அதேபோல், அவர்களையும் கர்நாடகாவிற்குள் நுழைய விடமாட்டோம்.

தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம் என கூறவில்லை; இருந்தால் தருகிறோம் என்றும், காவிரிக்காக தமிழகம் முழு அடைப்பு செய்து கர்நாடகாவின் மீது போர் தொடுத்துள்ளது  என்றும் கன்னட சலுவாலியா தலைவர் வாட்டாள்  நாகராஜ் கூறி உள்ளார்.