டில்லி

ல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத்தடை விதித்துள்ளதால் இந்தியா அந்நாட்டுடன் பண பரிவர்த்தனை குறித்து மாற்று வழிகளைப் பரிசீலனை செய்து வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா படை எடுப்பு நடத்தி இரு வாரங்களுக்கும் மேலாகப் போர் தொடுத்து வருகிறது.   இதற்குப் பல உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது.   ரஷ்யாவில் டாலர் மற்றும் யூரோ மூலம் பணப்பரிவர்த்தனை,  கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பரிவர்த்தனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-21 நிதியாண்டில் இந்தியா – ரஷ்யாவுக்கு இடையே8.1 பில்லியன் டாலர் அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் நகை, ஆபரணங்களில் வைரம் 50% பங்குவகிக்கின்றன. தற்போது பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகி யுள்ளனர்.

உக்ரைன்- ரஷ்யா போர் தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், ரஷ்யாவுடனான பணப் பரிவர்த்தனைக்கு இந்தியா மாற்று வழியை நடைமுறைப்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுடனான பரிவர்த்தனை பெரும்பாலும் யூரோ மூலம் மேற்கொள்ளப்படு கிறது. இனி ரூபாய் – ரஷ்ய ரூபிள் மூலமாகப் பரிவர்த்தனை மேற்கொள்வது மாற்றுவழியாக முன்வைக்கப்பட்டுள்ளது.