புதுடெல்லி:
போர் ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.
ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
கடந்த 2014-2018 வரை ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் சவுதி அரேபியா முன்னிலை வகிக்கிறது. இதற்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
உலக அளவில் நாடுகள் இறக்குமதி செய்யும் ஆயுதங்களில், 9.5% இந்தியா மட்டும் இறக்குமதி செய்கிறது.
ஆயுதங்கள் இறக்குமதியாவதில் தாமதம் எற்பட்டதால், கடந்த 2009-13 மற்றும் 2014-18 ஆகிய ஆண்டுகளில் ஆயுத இறக்குமதி 24% குறைந்துள்ளது.
கடந்த 2001-ல் ரஷ்யாவில் ஆர்டர் செய்யப்பட்ட போர் விமானம் மற்றும் 2008-ல் பிரான்ஸில் ஆர்டர் செய்யப்பட்ட நீர் மூழ்கிக் கப்பல்கள் தாமதம் ஆவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்குத் தான் ரஷ்யா அதிக அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் பிரான்ஸும் இந்தியாவுக்கான ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ளது.
எனினும், ரஷ்யாவுடன் ஆயுதங்கள் பெற இந்தியா நிறைய ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளதால், இந்தியாவுக்கான ஏற்றுமதி அடுத்த 5 ஆண்டுகளில் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 11-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.