கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வாதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் துருவ் ரத்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அரியானாவை சேர்ந்த 29 வயது இளைஞரான துருவ் ரத்தி வெறும் தேர்தல்களை நடத்துவதால் ஜனநாயக நாடு என்று அர்த்தமாகிவிடாது. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் நடைபெற்ற முறைகேட்டை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிந்துள்ளனர். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி தேர்தல் அதிகாரி குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

“பிரதமர் மோடியிடம் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். சற்று கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள்” என்று துருவ் ரத்தி கூறியுள்ளார்.

ஜனநாயகம் பற்றி பேசும் முன், ஜனநாயகம் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். ஆனால், மக்கள் பலர் இது பற்றி தவறாக புரிந்து வைத்துள்ளனர். நாட்டில் தேர்தல்கள் நடைபெற்று வாக்களித்தால் ஜனநாயக நாடு என்று நினைக்கிறார்கள்.

ஆனால், வட கொரியாவிலும் தேர்தல் நடைபெறுகிறது. நான் கிண்டலுக்காக சொல்லவில்லை. வட கொரியாவில் வழக்கம் போன்று தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 100% வாக்குப்பதிவு நடக்கிறது அது ஜனநாயக நாடு என்று உலக மக்கள் யாராவது கூறமுடியுமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா முழுவதும் சமீபத்தில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக 54% பேர் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மோடி அரசாங்கம் தோற்றுவிட்டதாக 56% பேர் தெரிவித்துள்ளனர்.

வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற மோடியின் கூற்றுகளை பெரும்பான்மையான பொதுமக்கள் நம்பவில்லை, எதிர்காலத்தைப் பற்றிய ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும் தான் பெரும்பாலான மக்களிடையே உள்ளது.

தவிர, பணவீக்கத்தால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வரும் நிலையில் நிலைமை இதைவிட மோசமாகும் என்று 30% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ED, CBI, IT ஆகிய அமைப்புகளைக் கொண்டு மோடி – ஷா கூட்டணி ஊழலுக்கு எதிரான போரை நடத்துவதாகக் கூறப்படுவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

இருந்தபோதும் வரும் மக்களவை தேர்தலில் பெரும்பான்மையை விட கூடுதலான இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெறும் என்றும் ஊடகங்கள் மூலம் மக்களை திசை திருப்பும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் Democratic People’s Republic of Korea என்று பெயரில் மட்டும் ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் வடகொரியா போன்று இந்தியாவிலும் தேர்தல் என்பது பெயரளவில் மட்டுமே நடைபெறும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று வட இந்தியாவின் பிரபல யூ டியூபர் துருவ் ரத்தி பதிவிட்டுள்ள இந்த வீடியோ 54 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.