டில்லி:

நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி நிலவும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 91 சதவிகிதம் நீர் நிலைகளில் சுமார் 25 சதவிகிதம் அளவிலான தண்ணீர் மட்டுமே இருப்பதாக மத்திய நீர்வளத்துறையும் எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டு  வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருவதாலும், பருவமழை சரியான அளவில் பொழியாத காரணத்தினாலும், நீர் நிலைகளில் தண்ணீரின் அளவு வரலாறு காணாத அளவுக்கு குறைந்து வருகிறது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள வானிலை மையம், தமிழகத்தில் சராசரியை விட பருவமழை 21 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், வெப்பச்சலன் காரணமாக  வரும் 12, 13, 14 ஆகிய தேதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

பல இடங்களில் வெயிலின் தாக்கம், 38 டிகிரி செல்சியஸ் முதல், 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகிறது. இநத ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த அனல் காற்றுக்கு இடையே தமிழகத்தின் சில பகுதிகளில் பெய்யும் கோடை மழையால் மக்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர். அப்படியிருந்தால்,  தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சதம் அடிததுள்ளது.

கோடை வெயில் அனலாய் வீசுவதால், பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சமடைந்து வீட்டுக்குள்ளேயே மாலை வரை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூரில் 109 டிகிரியும், திருச்சி, சேலம், பாளையங்கோட்டை, பரமத்தி வேலூர் மற்றும் சென்னை மீனம்பாக்கத்தில் தலா 104 டிகிரியும், மதுரை விமானநிலையத்தில் 103 டிகிரி, நாகையில் 102 டிகிரியும், கடலூரில் 100 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு உள்ளது.