பீஜிங்: சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ஆவது இடத்தில் தொடர்ந்து வருகிறது. இன்று நடைபெற்ற பெண்கள் கபடி இறுதி போட்டியில் தைபே அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது. இந்திய வீரர்கள் அடுத்தடுத்து பதங்களை குவித்து வருகின்றனர்.
72 ஆண்டு கால ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் முதன் முறையாக இந்தியா 100 பதங்களை பெற்றுள்ளது.
சீனாவின் ஹாங்சு நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 23-ல் தொடங்கியது. 45 நாடுகளை சேர்ந்த 12,000 பேர் பங்கேற்று வருகின்றனர். இதில், இந்தியா சார்பில் 655 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று 15-வது நாளாக நடைபெற்று வருகின்றன.
ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் தங்கபதக்கம் வென்று அசத்தியுள்ளார். தென் கொரிய வீராங்கனையை 149-145 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கபதக்கத்தை ஜோதி வென்றுள்ளார்.
.இந்திய வீரர் ஒஜாஸ் டியோடாலே 148 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மா 147 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அதுபோல பெண்கள் கபடி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை அள்ளியது. ஏற்கனவே அரையிறுதியில் இந்திய அணி 61-17 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இறுதிப்போட்டியில் இந்திய அணி சீன தைபே அணியை எதிர்கொண்டது. இதில் அபாரமாக ஆடி சீன தைபே அணியை போராடி வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் ஒஜாஸ் டியோடாலே 148 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மா 147 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இதற்கு முன்பு 2018-ல் 16 தங்கம், 1951-ல் 15 தங்கம், 2010-ல் 14 தங்கம் இந்தியா வென்றிருந்தது.
ஆசிய விளையாட்டு போட்டியில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. சீனா 187 தங்கம், 104 வெள்ளி, 63 வெண்கலம் என 354 பதக்கங்களை குவித்து உள்ளது. தொடர்ந்து 2வது இடத்தில் ஜப்பான் உள்ளது. அந்நாடு, 47 தங்கம், 57 வெள்ளி, 65 வெண்கலம் பதக்கங்களை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 3வது இடத்தில் தென்கொரியா தொடர்ந்து வருகிறது. தென்கொரியா 36 தங்கம், 50 வெள்ளி, 85 வெண்கலம் பெற்றுள்ளது. இந்தியா 100 பதக்கங்களுடன் 4வது இடத்தில் தொடர்கிறது.