லாகூர்: இந்திய அணி இணைந்து முயன்றால், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார் சோயிப் அக்தர்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி, தொடர் காயத்தால் அவதிப்பட்டு வருகிறது. ஆனாலும், சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சோயிப் அக்தர் கூறியுள்ளதாவது, “டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி இத்தொடரை கைப்பற்றும் என்று நம்புகிறேன். இந்திய அணி தொடர் காயத்தால் அவதியுற்றாலும், பல திறமையான மாற்று வீரர்கள் அணியில் உள்ளனர்.
இந்த மாற்று வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். அனைவரும் இணைந்து மீண்டுமொருமுறை முயன்றால், கோப்பை வெல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இத்தொடரை, இந்திய அணி வென்றால் அது உண்மையிலேயே மிகப்பெரிய வெற்றியாக அமையும். என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனைப் படைத்த தொடராக இருக்கும்” என்றுள்ளார் சோயிப் அக்தர்.