சென்னை :
இந்தியா 24 மணி நேரத்திற்குள் 10,000 புதிய பாதிப்புகளை சந்தித்துவருவதால், இந்தியாவின் கொள்கை இனி என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்களிடம் தி நியூஸ் மினிட் நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு :
இந்தியா வெள்ளிக்கிழமையன்று 10,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுகளைக் கண்டது. மேலும், உலகிலேயே கொரோனா வைரஸ் பாதித்த மோசமான நாடுகளின் பட்டியலில் பிரிட்டனுக்கு மேலே நகர்ந்து நான்காவது அதிக எண்ணிக்கையிலான பாதிப்பைக் கொண்ட நாடாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களும், தேசிய தலைநகர் டெல்லியும் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை காண்கின்றன. டெல்லி அரசாங்கம் சமீபத்தில் ஜூலை மாதத்திற்குள் 5 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியது, டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் “சமூக பரவல்” நிலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறினார். இந்தியாவில் சமூக பரவல் இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வியாழக்கிழமை வெளிப்படையாகக் கூறியிருந்தாலும், சில நகரங்கள் ஏற்கனவே அந்த நிலையில் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“இந்தியாவில் பாதிப்புகள் அதிகரித்து வருவது, கட்டுப்பாட்டு உத்திகள் செயல்படவில்லை என்பதையே காட்டுகிறது” என்று புகழ்பெற்ற தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜெயபிரகாஷ் முலில் கூறினார் “நாம் கட்டுப்படுத்த திட்டமிட்டிருந்ததை விட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நிறைய பாதிப்பு உள்ள நகரங்களில் இது நிகழ்கிறது. இது உயர்ந்து வருவதில் எனக்கு ஆச்சரியமில்லை, தொற்று நோய் சமுதாய பரவல் நிலையில் இருக்கும்போது இது மிகவும் பொதுவானது” என்று அவர் கூறுகிறார்.
“எனவே, கட்டுப்படுத்த முடியாதபோது, சமுதாய பரவல் இருப்பதை ஏற்றுக் கொண்டு நாம் செயல்பட வேண்டும். இது நமது தவறல்ல, இது நோயின் தவறு, இது தொற்றுநோயின் ஒரு பகுதியாகும்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
வேலூரைச் சேர்ந்த வைராலஜிஸ்ட் டாக்டர் ஜேக்கப் ஜான், இந்தியா தற்போது கட்டுப்படுத்த கூடிய நிலையை கடந்துவிட்டதாகவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களைத் தடுப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து, தொற்றுநோயின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இப்போது இந்த எண்ணிக்கையில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. தொற்றுநோய் இப்போது கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது அந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் இப்போது செய்ய வேண்டியது நம்மை பாதுகாத்துக் கொள்வதுதான். அனைத்து மூத்த குடிமக்களையும் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளவர்களையும், வீட்டு தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் பாதுகாக்கவும். நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை இருப்பவர்கள் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும், இதனால் கடுமையான முன்னெச்சரிக்கைகளுடன் வீட்டில் தங்குவதன் மூலம் இறப்பு விகிதம் குறையும்” என்று டாக்டர் ஜான் கூறுகிறார்.
பாதிப்பு இருப்பதாக புகைரளிக்கப்படாத இடங்களிலும் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அங்கு எந்தவிதமான தொற்றுநோய்களும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் ஜான் கூறுகிறார்.
“நோய் தொற்று இல்லாத இடங்களிலும், தொற்று நோய் இருப்பதாக புகார் வராத பல்வேறு கிராமங்கள் மற்றும் பழங்குடி பகுதிகளிலும், தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இப்போது நடைமுறையில் இருக்க வேண்டும். அதன்மூலம் இந்த இடங்களில் உள்ளவர்கள் பாதுகாக்கப்படலாம். கிராமப்புறங்களில், மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக இல்லாத காரணத்தாலும், வீடுகளுக்கு இடையில் சிறிது இடைவெளி இருப்பதாலும் தொற்றுநோயைத் தடுக்க சமூக தொடர்புகளை துண்டிக்க வேண்டியதில்லை, மாறாக பாதுகாப்பான இரண்டு அடி தூரத்தை உறுதிசெய்ய முடியும்,” என்று அவர் கூறுகிறார்.
இந்த நடவடிக்கைகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்வதோடு, அவர்கள் ஏன் முகக்கவசம் அணியவேண்டும் என்பதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். “தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை மக்களுக்குக் கற்றுக் கொடுங்கள், அதுவே சிறந்த உத்தி. அவர்களுக்கு வாழ்வியலை கற்றுத்தருவது அவசியம். சில நாட்களுக்கு முன்பு சுகாதார அமைச்சர் கூறியது போல இது ஒரு சமூக தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது, எங்கெல்லாம் குறைவான விழிப்புணர்வு உள்ளதோ அங்குதான் இந்த சமூக தடுப்பூசி தேவைப்படுகிறது”
பாதிக்கப்பட சாத்தியம் உள்ளவர்களைப் பாதுகாப்பதன் மூலமும், வீட்டுத் தனிமைப்படுத்தலைச் செயல்படுத்துவதன் மூலமும், நாடு முழுவதும் வாழ்வியல் மாற்றக் கல்வியின் மூலமாகவும், எல்லா நேரங்களிலும் வெளியில் முகக்கவசத்தை அணிந்துகொள்வதன் மூலமும், நோயாளிகளை கவனிக்கும் மருத்துவமனை நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதன் மூலமும், இறப்புகளை குறைக்கலாம் என்று வைராலஜிஸ்ட்கள் சில நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறார்கள்.
“மருத்துவர்களுக்கு பயிற்சியளிப்பதும் முக்கியம், பல மருத்துவர்கள் தங்களுக்கு பயிற்சியளிக்கவில்லை என்று என்னிடம் கூறுகிறார்கள். இது ஒரு புதிய நோய், யாரும் அவர்களுக்கு இதுகுறித்து கற்பிக்கவில்லை. கட்டுப்படுத்துதல் என்பது லட்சியம் ஆனால் அது சாத்தியமில்லை. கட்டுப்படுத்துவதற்கான நேரம் எப்போதோ முடிந்துவிட்டது. இது ஒரு மலை உச்சியில் இருந்து விழுவதைப் போன்றது, வீழ்ச்சியின் நடுவில், விழுவதை நிறுத்துங்கள் என்று சொல்ல முடியாது. தவறான நம்பிக்கையுடனும், போதுமான திட்டமிடல் இல்லாமலும் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் நாம் இந்த நிலைக்கு வந்துள்ளோம், ” என்று டாக்டர் ஜான் கூறுகிறார்.
வைராலஜிஸ்ட் டாக்டர் முலில் கூறுவது போல், மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்வதில் தற்போது கவனம் செலுத்துகிறார்கள் என்றே சொல்லவேண்டும்
“தொற்று அதிகரித்திருக்கும் நேரத்தில் நமது முன்னுரிமை சற்று மாற்றப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கட்டுப்பாட்டு கட்டத்தில், பாதிக்கப்பட்ட அல்லது தொடர்பில் இருந்த நபர்களை தனிமைப்படுத்த முயற்சித்தோம். இது சமூகத்தில் தொற்றுநோயைக் குறைக்க உதவுகிறது. அது மற்றவர்களைப் பாதுகாக்கும், ” என்று அவர் கூறுகிறார்.
தற்போது தனிநபர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலும் மற்றும் வயதானவர்களை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
“முதியவர்கள் வீட்டில் முகக்கவசம் அணிய ஆரம்பித்து உடல் ரீதியான தூரத்தை பேண வேண்டும் மற்றும் நிலையான விதிகளை பின்பற்ற வேண்டும். அது தொற்றுநோயை ஒரு அளவிற்கு குறைக்கும். நோயாளிகளை நாம் எவ்வளவு நன்றாக கவனிக்க முடியும் முக்கியமாக மருத்துவ கவனிப்பு என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும், மேலும் நோய்வாய்ப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து வர மக்களை ஊக்குவிக்க வேண்டும், இதனால் அவர்கள் குணமடைய நாம் உதவ முடியும். நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேர் நல்ல கவனிப்பைக் கொடுத்தால் மீட்க முடியும். எனவே உங்களுக்கு அந்த மாதிரியான நிலைமை இருக்கும்போது மக்களை மருத்துவமனைகளுக்குச் செல்ல ஊக்குவிக்க வேண்டும், ” என்று அவர் மேலும் கூறுகிறார்.
சில நகரங்கள் ஏற்கனவே சமுதாய பரவலைக் காணத் தொடங்கியுள்ளன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அது நிகழாது. இந்தியாவில் சமூக பரவல் நிலை வந்துவிட்டதாக அறிவித்தாலும், நாம் இப்போது செயல்படுத்திவரும் அணுகுமுறையிலிருந்து பெரிதும் மாறப்போவதில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அதனை இந்திய அரசு ஏற்கனவே எடுத்துள்ளது என்று உலகளாவிய சுகாதார, உயிர்வேதியியல் மற்றும் சுகாதார கொள்கை குறித்த ஆராய்ச்சியாளர், அனந்த் பன் கூறுகிறார்.
“நாம் கட்டுப்படுத்துதல் மற்றும் உடல் ரீதியான தூரத்தை செயல்படுத்தி வருகிறோம். அரசாங்கத்தின் சில பிரிவுகள் குறிப்பிட்ட அளவு சமூக பரவல் இருப்பதாகவும் மேலும் சிலர் சமூக பரவல் இருப்பதாகவும் கூறுவார்கள், ஆனால் அவை கட்டுப்பாட்டு மண்டலங்களில் மட்டுமே உள்ளது. ஆகவே, சமுதாய பரவல் இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளலாம், இதை ஏற்றுக்கொள்வதால் ஒன்றும் பெரிதாக மாறப்போவதில்லை என்பதால் இதனை ஏற்றுக்கொண்டு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கவேண்டும், இல்லையா? மேலும் இது குறித்து விவாதித்து வெறுப்படைவதை விட சமூக பரவல் இருப்பதாகக் கருதி ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் முன்னேறுவதே சிறந்தது, ” என்றும் அவர் சொல்கிறார்.
அதிக பாதிப்பு ஏற்படுவது இயற்கையானது தான், என்று டாக்டர் ஜான் கூறுகிறார், மேலும் ஜூலை முதல் வாரத்திற்கும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்கும் இடையில் இந்தியா உச்சத்தை காணும் என்று கூறுகிறார். “இது ஆறு வார காலமாகும், அது எப்போது வரும், எங்களுக்குத் தெரியாது, ஏனென்றால் கணிப்புக்கு பயன்படுத்த வேண்டிய தரவு எங்களிடம் இல்லை. எங்களிடம் உள்ள தரவு மிகவும் பயனுள்ளதாக இல்லை, ” என்று டாக்டர் ஜான் மேலும் கூறுகிறார்.
ஆனால் நோய்த்தொற்று, மக்கள் தொகை மற்றும் பரவலைப் பொறுத்து வெவ்வேறு நகரங்களும் மாவட்டங்களும் வெவ்வேறு நேரங்களில் உச்சத்தில் இருக்கும். இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் உச்சத்தில் இருக்க வாய்ப்பில்லை.
“பல மாவட்டங்களில் எந்தவொரு அல்லது மிகக் குறைவான தொற்றுநோய்களும் இல்லாததால், அந்த மாவட்டங்கள் பாதிக்கப்படுவதற்கு முன் நாட்டின் உச்சநிலை வரக்கூடும். இந்தியாவின் உச்சம் முடியும் வரை சில மாவட்டங்கள் உச்சத்தை எட்டாது. எனவே இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தொற்றுநோய் பரவல் இருக்காது. எனவே ஒவ்வொரு நகரமும் மாவட்டமும் பங்கு எடுத்துத் திட்டமிட வேண்டிய நேரம் இது. பணிக்குழுக்களை உருவாக்குவதும், தொற்றுநோயைத் திட்டமிடுவதும் இப்போதே அவர்களின் கடமையாகும். மூன்று மாதங்களுக்கு முன்பே மத்திய அரசு இதனைச் செய்திருக்க வேண்டும், ” என்றும் அவர் கூறுகிறார்.