டெல்லி: தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மேலும் 43 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத்தொடங்கியுள்ள வீரியமிக்க தொற்றான ஒமிக்ரான் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில், அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுதுத ஒமிக்ரான் தாக்கம் உள்ள நாடுகளில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மற்றும் 7 நாட்கள் தனிமை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனே எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 54 பேரும், தலைநகர் டெல்லியில் – 54, தெலங்கானா – 20, கர்நாடகா – 19, ராஜஸ்தான் – 18, , கேரளா – 15, குஜராத் – 14, உத்தரப்பிரதேசம் – 2, ஆந்திரா – 1, சண்டிகர் – 1, மேற்கு வங்காளம் – 1, தமிழ்நாடு – 1 ஆகியோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், மகாராஷ்டிரி மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் 28 பேர் குணமடைந்து இருப்பதாகவும், டெல்லியில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 43 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை 89 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 200 பேர் ஒமிக்ரான் கொரோனா திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மேலும் 43 பேருக்கு அதற்கு முந்தைய அறிகுறி தென்படுவதாக அமைச்சர் கூறினார்.