டில்லி
மும்பையில் நடந்த 26/11 தீவிர வாத தாக்குதலில் தொடர்புள்ள குற்றவாளிகளை விசாரணைக்கு அழைத்து வர அமெரிக்காவுடன் இந்திய அரசு பேசி வருகிறது.
கடந்த 2008 ஆம் வருடம் நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதில் 10 வெளிநாடுகளை சேர்ந்த 28 பேரும் அடங்குவர். இந்த தாக்குதலை நடத்திய பாகிஸ்தானிய தீவிரவாதிகளில் ஒருவரை தவிர மற்றவர் இந்தியாவின் எதிர் தாக்குதலில் கொல்லப்பட்டனர். பிடிபட்ட தீவிரவாதியான அப்துல் கசாப் தூக்கிலிடப்பட்டார்.
இந்த தாக்குதலை வடிவமைத்துத் தந்ததாக கூறப்படும் டேவிட் ஹெட்லி என்னும் அமெரிக்க வாழ் பாகிஸ்தானி தற்போது அமெரிக்காவில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு 35 வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவர் ஆகி உள்ள ஹெட்லியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி கே சிங், “கடந்த 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி அமெரிக்காவுடன் நடந்த பேச்சு வார்த்தையின் போது மும்பை 26/11 தாக்குதலில் தொடர்புள்ள டேவிட் ஹெட்லியையும் அவருடைய கூட்டாளிகளையும் மேலும் விசாரணைக்கு இந்தியாவுக்கு அழைத்து வருவது குறித்து பேசப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தாக்குதல் குறித்த வழக்கு பாகிஸ்தானிலும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தகுந்த தனடனையை பாகிஸ்தான் வழங்கும் என எத்ர்பார்க்கிறோம். அத்துடன் இது குறித்து விவரங்கள் அளிக்க வேண்டும் என இந்தியாவும் அமெரிக்காவும் பாகிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளது” என தெரிவித்தார்.