சவாலான சேஸிங் என்று வரும்போது, சீனியர் வீரர் ஒருவரை சுவர்போல் நிறுத்திவிட்டு, பிற வீரர்கள் அடித்து ஆடுவது என்ற ஒரே ஃபார்முலாவைத்தான் இந்திய அணி சிட்னி & பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தியது. ஆனால், அந்த வியூகத்தை உடைப்பதில், ஆஸ்திரேலிய அணிதான் தடுமாறிவிட்டது.

சிட்னி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெல்வதற்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆட்டமோ, ஒரு நாளுக்கும் மேலாக இருந்தது. எப்படியும் இந்திய அணி விரைவில் சரிந்துவிடும் என்று நினைத்தனர் ஆஸ்திரேலிய அணி உட்பட அனைவருமே.

ஆனால், துவக்க வீரர் ரோகித் ஷர்மா அரைசதம் அடிக்க, அதற்கடுத்து புஜாராவை சுவர்போல் வைத்து, ரிஷப் பன்ட் அடித்து துவைத்துவிட்டார். பின்னர், பன்ட் & புஜாரா ஆட்டமிழக்க, வேறுவழியின்றி, அஸ்வின் – விஹாரி இணை மூலமாக, டோட்டல் தடுப்பாட்டத்திற்கு மாறி, போட்டியை டிரா செய்தது இந்தியா. இந்த தடுப்பாட்டம் சாத்தியமாக காரணமே புஜாரா, ரிஷப் பன்ட் ஆட்டம்தான்!

அடுத்து பிரிஸ்பேன் டெஸ்ட்டில், கடைசி நாளில் 329 ரன்களை அடிக்க வேண்டும் கோப்பை வெல்வதற்கு. ஒன்று வெற்றி அல்லது டிரா என்ற வாய்ப்புகள் இந்திய அணியின் முன்னால் இருந்தன. ஆனால், பலவீனமான இந்திய அணியை எளிதாக சுருட்டும் திட்டத்துடன் இருந்தது ஆஸ்திரேலியா.

துவக்க வீரர் ரோகித் ஷர்மா விரைவில் வெளியேறிவிட, புஜாராவை கேடயம் போல் நிறுத்தி, அடித்து நொறுக்கினார் ஷப்மன் கில். அவர் சென்றவுடன், அதே புஜாராவை வைத்து, துவைத்து எடுத்துவிட்டார் ரிஷப் பன்ட். விளைவு, அவமானகரமான தோல்வியை சந்தித்தது ஆஸ்திரேலியா.

இரண்டு போட்டியிலுமே, இந்திய அணி பயன்படுத்தியது சாதாரண வியூகம்தான். ஆனால், இந்தியாவின் சுவரை உடைக்கும் தந்திரம்தான் ஆஸ்திரேலியாவுக்கு கைக்கூடவில்லை அல்லது அதிரடியாக ஆடிய வீரர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்யும் வித்தையையும் அது மறந்தது.

பலமான அணி – பலவீனமான அணி என்ற இரு அம்சங்களுக்கு இடையிலான சமன்பாடு, ஆஸ்திரேலியாவை மிகுந்த மனஅழுத்தத்திற்கு உட்படுத்தி, அவர்களைக் குழப்பிவிட்டது என்பதே உண்மை!