டெல்லி:
டாக்டர் மன்மோகன் சிங் நாட்டின் பிரதமராக இல்லாததை இந்தியா உணர்கிறது. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறேன்”’ என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று முதல் ஆளாக மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவு செய்து இருந்தார்.

ராகுல் காந்தி தனது வாழ்த்து செய்தியில், ”இன்று பிரதமராக மன்மோகன் சிங் இல்லை என்ற வெற்றிடத்தை ஆழமாக இந்தியா உணர்ந்து இருக்கிறது. கடமை, கண்ணியம், அர்ப்பணிப்பு ஆகியவற்றில் மற்றவர்களுக்கு உந்துதலாக அமைந்து இருக்கிறார். நீண்ட நாட்கள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் ட்விட்டரிலும் மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ”சமுதாயத்தில் புரையோடி இருக்கும் கெட்டதை நீக்க வேண்டியது ஒரு தலைவனின் தலையாய செயல். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் நலத்திற்காக பாடுபட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த நாளில் வாழ்த்து தெரிவிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.

மன்மோகன் சிங் பாகிஸ்தானில் இருக்கும் காக் என்ற இடத்தில் 1932, செப்டம்பர் 26ஆம் தேதி பிறந்தார். பொருளாதார நிபுணரான இவர் கடந்த 2004 முதல் 2014 வரை நாட்டின் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்தார். பிவி நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தப்போது 1991ல் நாட்டின் நிதியமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் ஐந்தாண்டுகள் பதவியில் நீடித்து, இரண்டாவது முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்ட ஒருவர் மன்மோகன் சிங்.