புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான மன்மோகன் சிங்கின் 88-வது பிறந்த தினமான இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி, தமிழகத் தலைவர்கள் என பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மட்டுமே… 1995ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 மற்றும் 2007ல் மீண்டும் மாநிலங்களவையில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீக்கிய சமயத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் மட்டும் தான், இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளன்று அவரது சாதனைகளை பட்டியலிடும் வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்துள்ளது.

1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக பணியாற்றினார் மன்மோகன் சிங். இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை அறிமுகப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்த மன்மோகன் சிங், பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்த மன்மோகன் சிங் நிதியமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்னர் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தியப் பொருளாதாரத்திற்கு புது பரிணாமத்தை கொடுத்தார் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் பிராந்தியத்தில் சீக்கிய குடும்பத்தில் 1932 செப்டம்பர் 26ஆம் தேதியன்று பிறந்தார் மன்மோகன் சிங். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவின் அம்ரித்சர் நகருக்கு இடம் பெயர்ந்தது.