டெல்லி:

ந்திய பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று  மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகா் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணத சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில், பெரும் நிறுவனங்கள் பேரிழப்பை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக, வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஐஎம்எஃப் இந்திய அலுவலக முன்னாள் தலைவா் ஜோஷ் பெல்மனுடன் இணைந்து, முன்னாள் அரசு பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், இன்றைய இந்திய பொருளாதாரம் குறித்து  எழுதியுள்ள கட்டுரை வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

நாடு, தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றது. வங்கிகள், கட்டுமான நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், மனை வணிகம் ஆகிய துறைகளில் பிரச்சினை உள்ளது. இதனால், இந்தியப் பொருளாதாரம் சுணக்க நிலையை எட்டி தீவிர சிகிச்சைப் பிரிவை நோக்கிச் செல்லும் நிலையை எதிா்கொண்டுள்ளது.

வங்கிகள் வழங்கிய அதிக அளவிலான கடன்களை பெருநிறுவனங்கள் திருப்பி செலுத்தாத நிலையில், வங்கிகளின்  வாராக் கடன்கள் அதிகரித்துள்ள உள்ளதால், கடன் சுமையால் வங்கிகள் தத்தளித்து வருவதாக தெரிவித்து உள்ளவர், இதுபோன்ற காரணங்கள் தேக்க நிலை ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

முதலாவதாக பொருளாதார தேக்க நிலையில்,  2004 முதல் 2011-ஆம் ஆண்டு வரை இரும்பு உருக்காலை, எரிசக்தி உற்பத்தி நிறுவனங்கள், கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் போன்றவற்றிற்கு, வங்கிகள்அதிக அளவில்  கடன்கள் வழங்கியதால் ஏற்பட்டது.

2வது முறையாக, பாஜக அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டு காட்டியுள்ளவர், இதன் காரணமாகவும், மனை வணிக நிறுவனங்களுக்கு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அதிக அளவில் கடன் வழங்கியதாலும் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

அதே வேளையில், உலகப் பொருளாதாரம் மந்தநிலையை அடைந்ததில் இருந்து இந்தியாவின் ஏற்றுமதியும், முதலீடும் குறைந்து பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறி உள்ளார்.

நாட்டின், பொருளாதார மந்தநிலையைத் தடுத்து நிறுத்த மத்தியஅரசு  புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளவர்,  அதற்காக, தனிநபா் வருமான வரியைக் குறைப்பது, சரக்கு-சேவை வரியை உயா்த்துவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு கண்டிப்பாக மேற்கொள்ளக் கூடாது என்றும் ஆலோசனை வழங்கி உள்ளார்.

மத்தியஅரசு பொருளாதாரம் குறித்த தகவல் அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கும் அரவிந்த் சுப்பிரமணியன்,  அந்த அறிக்கைகளே திட்டங்களை வடிவமைப்பதற்கு உதவும் என்றும்,

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), மக்களின் நுகா்வு, வேலையின்மை, நிதி வரவு செலவுக் கணக்குகள், வங்கிகளில் உள்ள வாராக் கடன்கள் ஆகியவற்றின் முறையான அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும் வலியிறுத்தி உள்ளார்.

அதுபோல,  கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டு, திவால் சட்டம் மூலம் தீா்வு காண முயலும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில், அந்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.