விசாகப்பட்டணம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது. ஸ்பின் பந்துவீச்சு நன்றாக ஒத்துழைக்கும் களத்தில் அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித்தும் அகர்வாலும் சிறப்பாக ஆடியதுடன் சரி. மற்ற வீரர்கள் விரைவாக ரன் குவிக்க ஆசைப்பட்டு யாருமே சோபிக்கவில்லை. ஜடேஜா மட்டுமே 30 ரன்களை எட்டி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரஹானே 15 ரன்களும், ஹனுமன் விஹாரி 10 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் கேஷவ் மகராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.