விருந்தினர் பக்கம்:
இந்தியா – ஒரு பரந்து விரிந்த தேசம். ஒரே சமயத்தில், ஒரு பகுதியில் கடுமையான வறட்சி நிலவும்; வேறொரு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். படித்து இருக்கிறோம். இது நமது பூகோள அமைப்பு வழங்கும் இரு துருவங்கள்.
நமது சமூக வாழ்க்கையிலும் முற்றிலும் எதிரெதிரான இரு முனைகள் உண்டு. அவற்றை நினைவு படுத்திய நாள்தான் – டிசம்பர் 16!
1971. டிச 16. ‘விஜய் திவஸ்’ (வெற்றி நாள்)
வங்க தேசத்துக்காக பாகிஸ்தானுக்கு எதிராகப் போரிட்டு, வாகை சூடிய நாள். வங்க தேசமும் இந்த நாளை வெற்றி நாளாகக் கொண்டாடுகிறது. (அவர்களுக்கு, மார்ச் 26 தான் விடுதலை நாள். 1971 மார்ச் 26 அன்று, ஷேக் முஜிபுர் ரஹ்மான், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து ‘வங்கதேசம்’ என்கிற தனி நாடு உருவானதாய் அறிவித்தார். அதன் தொடர் விளைவாகத்தான் வங்கத்துக்கு ஆதரவாய் பாகிஸ்தானுடன் நாம் போரில் குதித்தோம்.)

வங்கத் தலைநகர் தாக்காவில், பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அமிர் அப்துல்லா கான் நியாஸி, 93000 படை வீரர்களுடன் இந்தியத் தளபதி ஜக்ஜித் சிங் அரோரா முன்பாக சரண் அடைந்து, தோல்வியை ஒப்புக் கொண்டு கையெழுத்து இட்டார். .
ராணுவத்தின் துல்லிய திட்டமிட்ட தாக்குதல், அரசாங்கத்தின் சரியான காய் நகர்த்தல்கள், நாட்டு மக்களின் முழு ஒத்துழைப்பு, உலக நாடுகளின் ஒட்டு மொத்த ஆதரவு… அத்தனையும் பிரதிபலிக்கிற பிரமாண்ட வெற்றி.
கொண்டாடப்பட வேண்டிய வெற்றி; பெருமைப்பட வேண்டிய தருணம். சற்றும் ஐயமில்லை. “எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!”.  டிசம்பர் 16, 2012. எல்லாப் பெருமைகளும் நிலைகுலைந்து போகும் வண்ணம், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறையாத வேதனையை ஏற்படுத்தி விட்டுச் சென்ற மிகக் கொடூர மான சம்பவம் நடந்த தினம்.

தலைநகர் தில்லி. ஓர் இளைஞனும் அவனது தோழியும் மாலை நேரத் திரைப்படக் காட்சி முடிந்து, வீட்டுக்குத் திரும்பிப் போக, பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு ‘சிறுவன்'(?) உட்பட ஆறு பேர் இருந்த பேருந்து. ஒருவன் கை நீட்டி அழைத்து, இருவரையும் ஏற்றிக் கொண்டான். அதன் பிறகு நடந்ததை நாம் வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
‘நிர்பயா’ சம்பவம் அறிந்து, நாடு மொத்தமும் அதிர்ச்சியில் உறைந்து போனது. கண் நிறைய எதிர்காலக் கனவு களைத் தேக்கி வைத்து இருந்த ஓர் இளைஞியின் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் தாக்குதல், மனித குல வரலாற்றின் கருப்பு அத்தியாயம். நாகரிக சமுதாயம் என்று விளித்துக் கொள்ள சற்றும் அருகதை அற்றவர்கள் என்று உலகம் நம்மை விமர்சித்தது. கடுமையான விமர்சனம்; என்றாலும், உண்மைக்கு மிக நெருங்கிய விமர்சனம். காட்டுமிராண்டித் தனமான கொடூரத் தாக்குதலுக்குப் பின்னர், நாம் எப்படி நடந்து கொண்டோம்…?
நமது எதிர்வினை என்னவாக இருந்தது…? சாமான்யர்களின் எதிர்ப்பும் ஆவேசமும், ஊர்வலம் – அஞ்சலி என்பதைத் தாண்டி, ஓர் அங்குலமாவது முன்னேறியதா..? ஆபாசமும் வன்முறையும் எப்போதும் இணைந்தே செல்லக் கூடிய பேராபத்துகள். இந்த இரண்டுக்கும் எதிராக வலுவான நடவடிக்கை, எதுவும் எடுக்கப் பட்டு இருக்கிறதா…?
சம்பவம், வழக்கு, விசாரணை, தண்டனை… என்கிற சடங்குகளுக்கு அப்பால், ‘கள நிலமையில்’ என்ன முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது…? இந்தக் கொடுமை நடந்த சில நாட்களிலேயே இதே போன்று காட்டு மிராண்டித் தாக்குதல்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிகழத்தான் செய்தன – தமிழ்நாடு உட்பட.
‘நிர்பயா’ சம்பவம் நடைபெற்ற 2012ஆம் ஆண்டு, இந்தியாவில் 24923 பாலியல் வன்கொடுமைகள் பதிவாயின;
அதற்கு அடுத்த ஆண்டு 2013இல் பதிவான சம்பவங்கள் – 33707. சுமார் 9000 கூடுதல். (இவ்விரு ஆண்டுகளிலும், தமிழ்நாட்டில் மட்டும் முறையே 737 – 923) (மக்களவை கேள்வி எண் 4964 / 23/12/2014)
பொதுமக்களின் தீவிர போராட்டத்தின் காரணமாக விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. அதன் விளைவாக, பாலியல் வன்முறை சம்பவங்கள் சட்டப்படி பதிவு செய்யப் படுகின்றன. ஆகவேதான் இந்தப் பெருக்கம் என்பா ரும் உண்டு. காரணம் என்கிற அளவில் இதனை ஏற்றுக் கொள்ளலாம்.

மற்றபடி, அபாயகரமான ஒரு பிரசினைக்கு, தீர்வு முன் வைக்கப் பட்டதா..?  பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நிகழா வண்ணம் தடுப்பதற்கான சிறப்பு வழிமுறைகள் ஏதேனும் வகுக்கப் பட்டனவா…?
2013 ஏப்ரல் 7 அன்று, தில்லியில் நடந்த மாநில முதல்வர்கள் மற்றும், (மாநிலங்களில் உள்ள) உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது. பெண்கள், சிறுவருக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்து முடிவு செய்ய விரைவு நீதிமன்றங்களை தேவையான எண்ணிக்கையில் அமைப்பது என்று இந்தக் கருத்தரங்கில் தீர்மானிக்கப்பட்டது. குற்றத் தடுப்பு நடவடிக்கை அல்ல; குற்றம் நடந்து விட்டால், விரைந்து ‘நீதி’ வழங்க, சிறப்பு ஏற்பாடு!!
வன்முறை, ஆபாசம், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல்களுக்கு எதிராக மிகக் கடுமையான தொடர் நடவடிக்கை களை எங்கேயாவது முடுக்கி விட்டு இருக்கிறோமா…?   மாறாக, ஒரு தலைக் காதலால் அமில வீச்சு, கத்திக் குத்து, கடத்தல், பாலியல் வன்கொடுமை என்று விதம் விதமாக கொடூரக் குற்றச் செயல்கள் பெருகவே செய்கின் றன. இவையும் அன்றி,
தற்கொலைக்குத் தள்ளப் பட்டவர்கள், முறையாக வழக்கு பதிவு செய்கிற உரிமை கூட மறுக்கப் பட்டவர்கள், வெளியில் யாருக்கும் தெரிவிக்காமல், உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டு இருக்கிறவர்கள்….. ஏராளம்.
கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் – உழைப்பாளிகள், ‘அன்றாடங்காய்ச்சிகள்’, மற்றும், சமூக, பொருளாதார விளிம்பு நிலையில் இருக்கிற மகளிர்தாம் மிக மோசமாக பாதிக்கப் படுகிறார்கள்.
சில சமூக அமைப்புகள் இவர்களுக்காக அக்கறையுடன் போராடுகிறார்கள் என்பதைத் தவிர, தாமாகக் குரல் எழுப்பக் கூடிய அளவுக்கு ‘சக்தி’ அற்றவர்கள் இவர்கள். அதனால்தானோ என்னவோ, ‘செய்தி’ வந்த சில நாட்க ளில், ஒரு ‘கமிட்டி’ அல்லது ‘கமிஷன்’ போடுவதுடன் கடமை முடிந்து விட்டதாய், ‘போய்க் கொண்டே’ இருக்கிறோம்.
ஒட்டு மொத்த சமுதாயமும் மாறியாக வேண்டும்; பாலின ஈர்ப்பு குறித்து, சிறு வயது முதலே ஆரோக்கியமான கருத்துகள் ஊன்றப்பட வேண்டும்; ‘பார்வை’, படிப்பு, அணுகுமுறை, காதலுக்கு தரப்படும் முன்னுரிமை, முக்கியத்துவம், சக மனிதனுக்குத் தரப்பட வேண்டிய தனிப்பட்ட சுதந்திரம்… என்று ஒவ்வொரு அம்சமும் ஆழமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

அழகியலுக்குள் அடங்காத ஆபாசம், வரன்முறைக்குள் வராத வன்முறை.. திரைப்படங்களில், தொலைக் காட்சி களில் வருவதை நம்மால் தடுக்கவே முடியாதா…? பொதுப் பேருந்தில், ‘ஷேர் ஆட்டோ’வில், ஓட்டல்களில்,
கோயில் திருவிழாக்களில் என்று எங்கெங்கு காணினும் விரசம், ஆபாசத்தை விதைக்கும் நாராசப் பாடல்கள் காதைக் கிழிக்கின்றன. எப்படி அனுமதிக்கிறோம்…? எப்படி நம்மால் இதனை ஏற்றுக் கொள்ள முடிகிறது…?
மன்னிக்கவும். நம் சமூகம் மொத்தமும் விகாரப்பட்டுப் கிடக்கிறது. அரசாங்கம், காவல்துறை, நீதிமன்றங்கள், ஊடகங்கள் ஆகியோருடன் ஒவ்வொரு தனி மனிதனும் இணைந்து, பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே பாலியல் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியும்.
சமீப காலங்களில், தமிழக கிராமத்துப் பள்ளிகளில் நேரடியாக நாம் காணும், அனுபவித்து வரும் நிகழ்வுகள், பேரதிர்ச்சி தருபவையாகஉள்ளன. இது விஷயத்தில், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் உடனடியாகத் தங்களது முழு கவனத்தையும் செலுத்த வேண்டியது மிக அவசியம்; மிக அவசரம்.
வருமுன் காப்பதுதான் அறிவுடைமை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டை விட்டு விட்டு, ‘நிவாரண’ நடவடிக்கைகளில் வேகம் காட்டும் நமது மெத்தனப் போக்கு, இந்த ஒரு விஷயத்திலாவது மாறினால் நன்றாக இருக்கும்.
பள்ளிப் பருவத்திலேயே நாகரிக சமுதாயத்தை நோக்கிய பயணம் தொடங்க வேண்டும். கல்வி முறையை அரசியல் ஆக்குவதில், இது பற்றி காரசாரமாக விவாதிப்பதில், ஆதரிப்பதில், எதிர்ப்பதில் உள்ள ஆத்திர அவசரம், பண்பட்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் இல்லையே….! ஏன்?
பள்ளிச் சிறுவர்களுக்கு – நெறிமுறை சார்ந்த கல்வி; கல்லூரி இளைஞர்களுக்கு – நாகரிக நடத்தை பற்றிய விளக்க வுரைகள்; சமூக அறிவியல் அறிஞர்கள், உளவியல் நிபுணர்கள், மகளிர் அமைப்புகள் ஆகியோரின் ஒருங்கி ணைந்த பிரசாரப் பணி, குடியிருப்பு வளாகங்களில் பாலியல் சமத்துவம் பற்றிய வழிகாட்டுதல்கள்.. என்று பல முனைகளில் முனைந்து செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் நாம். ஆனால் இப்படி எதுவும் நடந்த பாடில்லை. இந்த திசை நோக்கி நாம் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை.
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், கல்வியில் மேம்பாடு, சர்வதேச முக்கியத்துவம் ஆகிய எல்லாவற்றையும் விட, நாகரிக நடத்தை மிக மிக முக்கியமானது. நவீனத்துவம் அல்ல நாகரிகம்; கண்ணி யமான பேச்சும் நடத்தையும்தான் பண்பாட்டின் அடிப்படைக் கூறு.
‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டு திரிவதில் கிஞ்சித்தும் பயன் இல்லை. ‘எதுவும் தவறாக இல்லை’ என்று உறுதிப் படுத்துவதுதான், ‘நிர்பயா’க்கள் பயமின்றி வாழ உதவும். அப்போதுதான், எந்தப் ‘பெருமை’யிலும் அர்த்தம் இருக்கும்.
– பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.