புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.


இது குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவி மாவட்டத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த வீரர்கள் மீது ஜெய்ஸி-இ-மொஹம்மது தீவிரவாத இயக்கத்தின் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஜெய்ஸி-இ-மொஹம்மது தீவிரவாத இயக்கம்.

தீவிரவாத அமைப்புகளுக்கு எந்த ஒரு நாடும் ஆதரவு தரக்கூடாது என ஐநா மற்றும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. சர்வதேச தீவிரவாதி மசூத் அஜார் தலைமையில் இந்த தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது.

மசூத் அஜாரையும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்திய அரசு வைக்கும் கோரிக்கைக்கு சர்வதேச சமுதாயம் ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு இந்திய அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.