புதுடெல்லி:
ந்தியா-சீனா இடையே 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

கிழக்கு லடாக்கில் கல்வான் மோதலைத் தொடர்ந்து பாங்காங் திசோ ஏரி, ஹாட் பிரிங்ஸ், கோக்ரா, தேப்சங் போன்ற பகுதிகளில் இந்திய, சீன படைகள் குவிக்கப்பட்டன. ராணுவ டாங்குகள் உட்பட பயங்கர ஆயுதங்கள் குவிக்கப்பட்டதால் போர் மூளும் சூழல் ஏற்பட்டது. எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. 9 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பாங்காங் திசோ ஏரிப் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இரு ராணுவம் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 10ம் தேதியிலிருந்தே அப்பகுதியிலிருந்து படைகள் வாபஸ் பெறும் பணி தொடங்கியது.

இந்த ஒப்பந்தத்தின்படி, பாங்காங் திசோ ஏரியின் பிங்கர் 8 பகுதிக்கு சீனா ராணுவம் மீண்டும் விலகிச் செல்லும், பிங்கர் 3 பகுதியில் இந்திய ராணுவம் தனது நிரந்தர முகாமை அமைத்துக் கொள்ளும். தற்போது, ஏரிப் பகுதியில் படைகள் விலகி இருப்பதோடு அங்கு கொண்டு வரப்பட்ட ராணுவ டாங்கிகள், தற்காலிக கட்டமைப்புகள், முகாம்கள், பதுங்குகுழிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இதனை இரு நாட்டு ராணுவம் விரிவான ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதைத் தொடர்ந்து, ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா மற்றும் தேப்சங் ஆகிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இன்று 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. சீனாவுக்கு சொந்தமான மோல்டோ எல்லைப் பகுதியில் இன்று காலை 10 மணிக்கு நடக்க உள்ள இப்பேச்சுவார்த்தையில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள பங்கேற்க உள்ளனர்.