டில்லி

அரசுத் துறைகளில் உள்ள வாகனங்கள் அனைத்தையும் மின் வாகனங்களாக மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறி உள்ளார்

எரிபொருள் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மின்சாரம் போன்ற மாற்றுச் சக்தி  குறித்து விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.   மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனப்புகையால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புக்களையும் மின் வாகனங்கள் போன்றவற்றால் வெகுவாக குறைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.   இந்நிலையில் நேற்று மின் வாகனங்கள் மற்றும் மின் சார்ஜ் மையங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு டில்லியில் நடந்தது.

இந்த விழாவில் பாஜக மூத்த தலைவரும் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின்கட்கரி, மத்திய மின் துறை அமைச்சர் ஆர் கே சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தனது உரையில், “மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியைக் குறைக்க மற்றும் எரிபொருள் செலவை மிச்சம் செய்ய மின் வாகனப் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

விரைவில் எனது அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து துறைகளில் உள்ள வாகனங்களையும் மின் வாகனங்களாக மாற்ற உத்தரவிட உள்ளேன்.  மற்ற அமைச்சகங்களும் இதைப் போல் உத்தரவிட வேண்டும்.   விரைவில் அரசுத் துறை வாகனங்கள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும்.   மின் வாகனம் ஒன்றில் மூலம் மாதம் ரூ.30,000 மிச்சமாகும்.  அவ்வகையில் டில்லியில் மட்டும் மாதம் ரூ.30 கோடி மிச்சமாகும்.

அத்துடன் மின்சார அடுப்பு சாதனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.  இதனால் எரிவாயு இறக்குமதி செலவு வெகுவாக குறையும்.  ஏனெனில் சமையல் எரிவாயு மற்றும் விறகு ஆகியவற்றுக்கு ஆகும் செலவை விட மின்சார அடுப்புக்களின் பயன்பாட்டுச் செலவு மிகக் குறைவாக இருக்கும்.  இத்தகைய நடவடிக்கைகளால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர் கே சிங், “வரும் 5 ஆண்டுகளில் இந்தியச் சாலைகளில் மின்சார பேருந்துகளை மட்டுமே அனுமதிக்கும் கொள்கை குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.  அத்துடன் 4 ஆண்டுகளில் மின்சாரத்தால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களைப் பயன்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்” எனத் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.