டில்லி

ழைய பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய அரசு முழுமையாக தடை விதித்துள்ளது.

உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு அதை மீண்டும் புதிய பொருட்களாக இந்தியா மாற்றி வந்தது. ஆனால் இதன் மூலம் பிளாஸ்டிக் முழுமையாக புதிய பொருட்களாக மாற்ற முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பிளாஸ்டிக் கழிவுகள் நாட்டில் பெருகி வந்தன. அதை ஒட்டி இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் பிளாஸ்டிக் இறக்குமதி தடை செய்யப்பட்டது.

அந்த மாநிலங்களில் உள்ள சிறப்பு ஏற்றுமதி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மட்டும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் இந்த சலுகையை பயன்படுத்தி ஏற்றுமதி செய்யப்படாத பொருட்கள் செய்யவும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்தனர்.

அதிகம் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் சீனாவில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உலகின் அதிக அளவில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருந்தது. தற்போது இந்தியாவில் 25,940 டன்கள் மீண்டும் உபயோகிக்க முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன.

இதை ஒட்டி இந்தியா பழைய பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதிக்கு முழுமையாக தடை விதித்துள்ளது. இந்த தடை இந்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு அமுல் செய்யப்பட்டுள்ளது. வரும் 2022 க்குள் ஒரு முறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கும் முழுத்தடை விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.