புதுடெல்லி:
விஜய் மல்லையா அடைக்கலம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தால், அதனை பரிசீலிக்க வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை இங்கிலாந்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததுடன் ஐரோப்பிய நாடான இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.மல்லையா மீதான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடந்து முடிந்த நிலையில், அவர் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், நாடு கடத்துவதில் பல்வேறு சட்ட பிரச்சினைகள் உள்ளதால் உடனடியாக நடைபெறாது என தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, விஜய் மல்லையா மனிதாபிமான அடிப்படையில் இங்கிலாந்தில் தஞ்சம் அடைய முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டின் மூன்றாவது பிரிவில் உள்ள விதியின் கீழ், அவர் தஞ்சம் கேட்டுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த விதியின்படி ஒருவரை எந்த ஒரு காரணத்திற்காகவும் மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்துவது இழிவு படுத்துவது போன்றவை அனுமதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மல்லையா அடைக்கலம் கேட்டால் அதை பரிசீலிக்க வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்ச செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா விஜய் மல்லையாவை முன்னதாகவே நாடு கடத்த வேண்டும் என்ற விசயத்தில் இங்கிலாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக தெரிவித்தார்.