புதுடெல்லி: புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படவுள்ள கர்தார்பூர் காரிடாருக்கு, நாள் ஒன்றுக்கு 5000 இந்திய யாத்ரிகர்களை விசா எதுவுமின்றி அனுமதிக்க வேண்டுமென, இந்தியா தரப்பில் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கர்தார்பூரில் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக்கின் சமாதி உள்ளது. எனவே, அந்த ஸ்தலத்திற்கு, பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்டத்திலிருந்து யாத்ரிகர்கள் சென்றுவரும் வகையில், புதிதாக காரிடார் கட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில், இந்தியாவிலிருந்து நாள்தோறும் 5000 சீக்கிய யாத்ரிகர்கள், அந்த ஸ்தலத்திற்கு விசா எதுவுமின்றி சென்று வருவதற்கு, பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டுமென இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறையின் இணைச் செயலாளர் எஸ்.சி.எல்.தாஸ் தலைமையிலான இந்தியக் குழுவும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் முகமுது ஃபைஸல் தலைமையிலான பாகிஸ்தான் குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.
அப்போதுதான் இந்திய தரப்பில் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இந்த காரிடார் திறப்பு நடைமுறைகளை, சுமூகமான சூழலில் மேற்கொள்ளும் வகையிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இருநாடுகளுக்குமிடையே காரிடார் தொடர்பாக நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
– மதுரை மாயாண்டி