டில்லி

ச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியாவுடன் சீனா இணைந்து ஒரு புதிய ஒப்பந்தத்தை அமைத்துள்ளது.

ஈரான் நாட்டில் இருந்து இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தன. அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்த்தத்தை ஈரான் முறித்துக் கொண்டதால் அமெரிக்கா ஈரானுக்கு வர்த்தக தடை விதித்துள்ளது. அத்துடன் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியை முடித்துக் கொள்ள ஆறு மாத கால அவகாசம் கொடுத்தது. அந்த அவகாசம் இம்மாதம் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இனி ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அத்துடன் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இனி மேல் தொடர அனுமதி கோரியதை அமெரிக்கா மறுத்து விட்டது. அத்துடன் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் தனியாரிடம் உள்ளதால் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் விற்க உறுதி அளிக்கவும் அமெரிக்கா மறுத்துள்ளது.

கச்சா எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் பெரும் பங்கு வகிக்கின்றன. தற்போதைய நிலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மேற்காசிய நாடுகள் கூடுதலாக பிரிமியம் கட்டணம் வசூலித்து வருகின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கிறது. அது பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலையை கடுமளவில் உயர்த்தி விடுகிறது.

இதற்கு தீர்வு காண இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து புதிய ஒப்பதத்தை உருவாக்கி உள்ளன. அந்த ஒப்பந்தப்படி இனி எண்ணெய் இறக்குமதி நாடுகள் பேரம் பேச மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து சீன அதிகாரி ஒருவர் இது இருநாடுகளுக்கு இடையில் ஆன வர்த்தக உறவு மேம்பாட்டுக்கு ஒரு ஆரம்பமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.