டெல்லி: நாடு முழுவதும் நேற்று (27ந்தேதி) ஒரே நாளில் ஒருகோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளன. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த ஜனவரி மாதம் 16ந்தேதி தொடங்கிய இந்த திட்டம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது தீவிரமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்டிருந்த வேளையில் கோவிஷீல்ட், கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தன. அடுத்து 3வது தலை தாக்கக்கூடும் என்பதால், தடுப்பூசி இயக்கம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை (27ந்தேதி) ஒரே நாளில் நாடு முழுவதும 1கோடியே 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன .
நாடு முழுவதும் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை கடந்த வியாழக்கிழமையன்று இந்தியா 61 கோடி டோஸ்கள் என்ற இலக்கை எட்டியது. 62 கோடியை தொட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 14 கோடி பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசின் கோ-வின் இணையதளத்தில் பதிவாகியுள்ளது.
இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, உத்தரபிரதேசத்தில் நேற்று அதிக அளவாக 28.62 லட்சம் டோஸ்களும், கர்நாடகாவில், 10.79 லட்சம் டோஸ்களும் போடப்பட்டு உள்ளன.
நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை இந்த மையம் வாங்கத் தொடங்கியது. மீதமுள்ள 25 சதவிகிதத்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடர்ந்து வருகின்றன.
ஒரே நாளில் 1கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள இந்த சாதனை கொண்டாடப்பட வேண்டிய தருணம் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் இந்த இயக்கத்தை வெற்றியாக்கியவர்களுக்கும் டிவிட்டர் மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.