காந்திநகர்:

குஜராத்தில் சுயேட்சை எம்எல்ஏ காந்த், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அ க்கட்சியின் பலம் 78ஆக உயர்ந்துள்ளது.

பூபேந்திர சிங் திந்தோர் என்ற அந்த சுயேட்சை வேட்பாளர் பாஜக வேட்பாளர் அல்பேஸ் தாமோரை 4 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார். இவர் இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இது குறித்த காந்த் கூறுகையில், ‘‘நான் சுயேட்சையாக இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். திரும்பவும் எனது கட்சிக்கு திரும்பியுள்ளேன். மீண்டும் எனக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் இணைந்துள்ளேன். இதை ராகுல்காந்தியிடம் தெரிவித்துள்ளேன். அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்’’ என்றார்.

காந்த் தாயார் சாவித்தபென் கடந்த 2012ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தொகுதியின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தினத்தன்று அவர் மாரடைப்பில் இறந்தார். இதனால் 2013ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் நிமிஷா சுதர் புபேந்திர சிங்கை வெற்றி பெற்றார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 3 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதில் லுனவாடா தொகுதியில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் ராதன்சிங் ரத்தோட் பாஜக.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தற்போது மற்றொரு சுயேட்சை எம்எல்ஏ காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.