அதிகரித்து வரும் “கடன் தொல்லையால் தற்கொலை” செய்திகள்:
இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சிலரின் வாழ்க்கை வசந்தம் வீசும் இன்பப் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும் சுழன்று தாக்க வாழ்க்கையே சோகமாகி சுட்டெரிக்கும் பாலைவனமாக மாறிவிடுவதும் உண்டு. ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான், தனக்கு பிரச்சினையே வரக் கூடாது மற்றும் உலகின் சகல சுகமும் ஒருங்கே பெற்று இன்பத்தில் உலா வர வேண்டும் என்று, அதுதான் மனித இயல்பும்கூட.
வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் மனம் உடைந்து கதறி, கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தடுக்கப்பட்ட செயலைச் செய்யவும் துணிந்து விடுகின்றனர். உதாரணத்திற்கு, பல இலட்ச மனித உயிர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ஹிட்லர் கூட இறுதியில் தோல்வியைத் தாங்கமுடியாமல் மனம் உடைந்து உணவுக் கிடங்கில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகச் சரித்திரம் நமக்கு உணர்த்துகிறது.
அன்றாடம் பத்திரிக்கைளைப் புரட்டினால் இளம்பெண் தற்கொலை, காதல் ஜோடிகள் தற்கொலை, கள்ளக் காதலினால் தற்கொலை, கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை, பரிட்சையில் தோல்வியடைந்ததால் பள்ளி மாணவ-மாணவி தற்கொலை… என்று வகைவகையான தற்கொலை செய்திகள் ஏழை-பணக்காரர், ஆண்-பெண், சிறியவர்-பெரியவர் என்ற பேதமின்றி நடந்தேறுவதை காண முடிகிறது.
இந்திய சுகாதார நிறுவனம் நடத்திய புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு தற்கொலை இறப்பு நிகழ்கிறது, அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 240 இறப்பு தற்கொலையாய் நிகழ்கின்றன. இந்தியாவிலேயே மிக அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலம் கேரளம் ஆகும். உலக தற்கொலை எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு பத்தில் ஒரு பங்கு ஆகும் (1/10). இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இந்தத் தற்கொலை இறப்புக்கள் விலைவாசி போல் ஏறிக்கொண்டேதான் போகின்றன.
மார்ச் 26,2016 கொத்தங்குடி தனசேகர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தனசேகர்(47). இவருக்கு இந்திராகாந்தி என்ற மனைவியும், நந்தகுமார் என்ற மகனும், மீனா என்ற மகளும் உள்ளனர். 2014-ல் திருப்புறம்பியம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில், நடவு இயந்திரம் வாங்க ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ.10 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். கடன் நிலுவையை செலுத்துமாறு வங்கி அலுவலர்கள் தொலைபேசிமூலம் நெருக்கடி கொடுத்தார்களாம். மேலும், அவர் கந்து வட்டிக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியுள்ளதாகவும், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த தனசேகர், நேற்று முன்தினம் இரவுப் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஜூன் 3, 2016 பொங்கலூர் தாமரைக்கண்ணன் : திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன்,45. இவர் பல்லடம், கணபதிபாளையம் அருகேயுள்ள அல்லாலபுரம் பகுதியில் பனியன் நிறுவனம் வைத்துள்ளார். அந்த நிறுவனத்தின் 3வது மாடியில் குடியிருந்து வருகிறார்.
சம்பவதன்று, ஹாலில் தாமரைக்கண்ணன் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது
பக்கத்து அறையில், அவரது மனைவி பிரபாவதி, மற்றொரு அறையில் அவரது மகன்கள் தனுஷ்,14, அனுஷ்10 வாயில் டேப் வைத்து ஒட்டித் தூக்கில் தொங்கியவாறு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜூன் 30, 2016 கட்டுமடவு கலைசெல்வன்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, கட்டுமடவு பகுதியைச் சேர்ந்தவர் கலைசெல்வன், 31, கூலி; இவர் கிராமத்தில் கடன் வாங்கிவிட்டு, கிணத்துக்கடவு அடுத்துள்ள சொலவம்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்தார். இவரது தாயார் போனில் தொடர்பு கொண்டு, வாங்கிய கடனை கேட்டுக் கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்கின்றனர் என்று கலைசெல்வனிடம் கூறியுள்ளார். மனம் உடைந்த கலைசெல்வன், கிணத்துக்கடவு உரக்கடையில், தென்னை மரத்திற்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி குடித்து இறந்துள்ளார்.
ஜூலை 16, 2016 அவனியாபுரம் மாணவர் லெனின் : மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த ஏழை மாணவர் லெனின் பாரத் ஸ்டேட் வங்கியில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கடனாகப் பெற்று, சிவில் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி, மாணவர்களுக்கு வழங்கியுள்ள கல்விக் கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீத மதிப்பிலான விலைக்கு விற்பனை செய்து உள்ளது.
இதனால் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு கடனைக் கட்டுமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கடிதம் அனுப்பி வருகிறது. அதோடு மட்டுமின்றி, கடனை வசூலிக்க அடியாட்களை பணியாளர்களாகச் சேர்த்து, மாணவர்களையும், அவர்தம் பெற்றோரையும் மிரட்டி வருகின்றனர். படிப்பை முடித்து ஒரு மாத காலமே ஆன நிலையில், லெனின் பெற்ற கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு வங்கி நிர்வாகம் தனியார் முகவர்மூலம் நிர்பந்தப்படுத்தி இருக்கிறது. தனியார் முகவர்கள் பேட்டை ரவுடிகளைப் போல நெருக்கடி தந்ததால் மனம் உடைந்த மாணவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ஜூலை 21, 2016 கொளத்தூர் சாய்ராம்: கொளத்தூர், ஜிகேஎம் காலனியைச் சேர்ந்தவர் சாய்ராம் (46). இவர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தார்.
இவரது மனைவி வசந்தா (40). மகள் ஐஸ்வர்யா (13).
சம்பவதன்று, அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் வீட்டின் பூட்டை போலிசார் உடைத்துப் பார்த்தபோது, சாய்ராம் தூக்கில் தொங்கியும், மனைவி வசந்தா, மகள் ஐஸ்வர்யா ஆகியோர் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டும் பிணமாகக் கிடந்தனர்.
சில நாட்களுக்கு முன் அவரது தாய் வீட்டை விற்றதில் இவருக்கு ₹3 லட்சத்தை அவரது சகோதரர்கள் கொடுத்துள்ளனர். தனக்கு மட்டும் குறைவாகப் பணம் கொடுத்ததால் சாய்ராம் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இவருக்குக் கடன் தொல்லை இருந்துள்ளது.
ஜூலை 23, சென்னை கொருக்குப்பேட்டை ஆர்.கே.நகர் 1–வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45 ). இவருடைய மனைவி விஜயா (39). இவர்களுக்குக் குழந்தை இல்லை. செல்வம் அதே
பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். கடை நடத்துவதற்காக அப்பகுதியில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். மேலும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தொடர்ந்து
கடையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் செல்வத்துக்கு
நெருக்கடி கொடுத்ததாகத் தெரிகிறது. தூக்குப்போட்டு தற்கொலை இதனால் கணவனும், மனைவியும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர். இதனையடுத்து மின்விசிறியில் செல்வமும், அருகில் இருந்த கொக்கியில் விஜயாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். செல்வத்தின் வீட்டில் இருந்த ஒரு கடிதத்தைப் போலீசார் கைப்பற்றினர். அதில், ‘எங்களுக்கு யாரும் இல்லை. நாங்கள் அனாதைகள். கடன்தொல்லை காரணமாக இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஜூலை,29 காடுவெட்டி டேனியல் ராஜ் : கன்னியாகுமரி தக்கலை அருகே முலகு மூடு காடுவெட்டி பகுதியைச் சேந்தவர் டேனியல் ராஜ், இவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவர் கடன் தொல்லையால் விசம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
July 28,2016 அயப்பாக்கம் துரைமுருகன் : ஆவடி, திருமுல்லைவாயலை அடுத்த அயப்பாக்கம் மாருதிராம் நகர், சீனிவாசா தெருவைச் சேர்ந்தவர் துரைமுருகன்(வயது 37).
இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில் சொந்தமாகக் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துரைமுருகன் கடன் வாங்கி, தனது வெல்டிங் பட்டறையை விரிவாக்கம் செய்திருந்தார்.அதன்பிறகு வெல்டிங் பட்டறையில் சரியாக வேலை இல்லாததால் துரைமுருகனுக்கு கடன் தொல்லை அதிகமானது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது பட்டறையை மூடிவிட்டார்.இதையடுத்து, அதே பகுதியில் தினக்கூலி அடிப்படையில் துரைமுருகன் வெல்டராகப் பணியாற்றி வந்தார். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த துரைமுருகன், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொண்ட துரைமுருகனுக்கு கோமதி (35) என்ற மனைவியும், கோசலன்(10), சாய்சரண்(4) என 2 மகன்களும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில். தமிழகத்தில் 2400 விவசாயிகள் கடன் தொல்லைகளால் தற்கொலை செய்து கொண்டனர்.
இவை நமக்கு சொல்லும் பாடம் என்ன? ஆடம்பரச் செலவுகளுக்காக கடன் வாங்குபவர்களை குறை கூறலாம். அன்றாட உணவுக்கே கடன் வாங்கும் சூழல் இங்குள்ள ஏழைகளுக்கு நிலவுகின்றது.
இத்தகைய மக்களை குறிவைத்து ” கடன் வழங்கும் தொழில்” வெகு ஜோராய் நடைபெற்று வருகின்றது.
தடை செய்யப்பட்ட கந்து வட்டி தொழில்:
தமிழகத்தில் எவரேனும் தான் கொடுத்த கடன் தொகைக் கான தின வட்டி, மணிநேர வட்டி, கந்துவட்டி, மீட்டர்வட்டி வரைமுறையில்லா வட்டி அல்லது தண்டல் வட்டி என எந்த முறையில் வசூல் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு சட்டத்திற்கு புறம்பான முறையில் எந்த வட்டியை வசூல் செய்தாலும் கந்து வட்டி விதிப்பு தடுப்புச்சட்டத்தின் படி அபராதத்துடன் கூடிய 3 ஆண்டுகள் வரையில் சிறைதண்டனை பெற்றுத்தரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே வேறு எங்கும் இதுபோல் கந்து வட்டி வசூலிப்பார்களா என்பது சந்தேகம்தான். பத்து வட்டி, ரன் வட்டி, மீட்டர் வட்டி இப்படி ஏகப்பட்ட வட்டிகள். கடனை திருப்பிக் கொடுக்காவிட்டால் ரவுடிகளை வைத்து மிரட்டுவார்கள். இவர்கள் தொழில் கனஜோராய் நடந்து வருகின்றது. இதற்காகவே கைவசம் ஐந்தாறு ரவுடிகளை கூடவே வைத்திருப்பார்கள். வட்டியாக பணத்தையும் இழந்து மானத்தையும் இழக்க வேண்டியிருக்கும். போலீசும் பல நேரங்களில் இவர்களுக்கு உடந்தையாக இருப்பதுதான் வேதனை.
இவை போக தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்து வரும் கடன் கலாச்சாரம் குறித்து கட்டுரை விரைவில்…