சென்னை: தமிழ்நாட்டில்போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க வலியுறுத்தி, அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் வரும் 12-ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்வபடி, போதை பொருள் பயன்பாட்டை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என் வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுக தரப்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் விற்பனையை தடுக்க காவல்துறை தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கு தகுந்தாற்போல, திமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதால், எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துகளால் நிரம்பியிருக்கும் இன்றைய சூழல் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தோமெட்டபைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இன்னும் மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. அனைத்து போதைப் பொருள்களும் சா்வசாதாரணமாகப் புழங்கும் மாநிலமாக தமிழகத்தை திமுக அரசு மாற்றியிருக்கிறது. போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காத முதல்வருக்கு கடும் கண்டனத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா் .
இதைத்தொடர்ந்து, இன்று (மாா்ச் 12-ஆம் தேதி) காலை 10 மணியளவில் போதைப் பொருள் அதிகரிப்பு விவகாரத்தைக் கண்டித்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது.
மனித சங்கிலி போராட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பலமுறை சட்டமன்றப் பேரவையில் எடுத்துரைத்ததோடு, பொதுவெளியில் கட்சியின் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள் என்று போதைப் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்பதற்காக அதிமுக தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது. ஆனாலும், திமுக அரசு இவ்விஷயத்தில் அலட்சியப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.
தமிழகத்தில் போதைப் பொருட்களின் அதிகரிப்பால் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களுடைய வாழ்க்கை பெரிதளவும் பாதிப்படைந்து இருக்கிறது. இதனால், பெற்றோர்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். இந்த போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்காமல் வாய் மூடி, கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது திமுக அரசு. ஏற்கெனவே, தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் 26 பேர் பலியாகி, அந்தக் குடும்பங்கள் நிற்கதியாய் நிற்கின்றன.
இதுபோன்று போதைப் பொருள்களின் பழக்கத்துக்கு ஆட்பட்டுப்போய் அதிலிருந்து மீள முடியாமல் இளைஞர்களும், அவர்களுடைய குடும்பமும், உற்றார் உறவினர்களும் வேதனையின் விளிம்பில் இருக்கின்றனர்.
சுமார் 2,000 கோடி ரூபாய் அளவிலான போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் அ. ஜாபர் சாதிக், திமுக அரசின் முதல்வர் மற்றும் அவரது மகனும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி மற்றும் திமுகவைச் சேர்ந்த முன்னணித் தலைவர்களுடனும், முதல்வரின் குடும்பத்தினருடனும் நெருக்கமாய் இருப்பது வெட்கக் கேடு; வேதனையானது. மேலும், தமிழகக் காவல் துறைத் தலைவர் சங்கர் ஜிவால் ஒரு நிகழ்ச்சியில் மேற்படி ஜாபர் சாதிக்குக்கு பரிசளித்து, பாராட்டுகின்ற புகைப்படங்களும் வெளியாகி இருப்பதிலிருந்து தமிழகக் காவல்துறை எந்த நிலையில் இருக்கிறது என்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
எனவே, திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் போதைப் பொருள்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்திலும், போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகம் தலைகுனிந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்ற வகையில், அதிமுக சார்பில் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.